நியாயாதிபதிகள்
இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவினால் வழிநடத்தப்பட்டு கானானுக்குள் நுழைந்தார்கள்.
பல வருடங்கள் கழித்து யோசுவா வயதாகி இறந்து போனார். யோசுவாவின் காலத்திற்குப்பின் நியாயாதிபதிகள்
இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களாக செயல்பட்டார்கள். மற்ற தேசங்களை ஆண்ட ராஜாக்களைப் போலவே
இவர்களும் செயல்பட்டார்கள். தேவனே நியாயாதிபதிகளைத் தெரிந்தெடுத்து வெளிப்படுத்தினார்.
இவர்கள் இஸ்ரவேலரை யுத்தத்தில் வழிநடத்துவது மட்டுமல்லாமல், நியாயவிசாரணை செய்பவர்களாகவும்,
தீர்க்கதரிசிகளாகவும் செயல்பட்டார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசேயும், யோசுவாவும் இஸ்ரவேல்
ஜனங்களை நியாயம் விசாரித்திருந்தாலும், நியாயாதிபதிகளின் காலம்,
யோசுவாவிற்குப் பின் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின ஒத்னியேலின் காலத்திலிருந்தே கணக்கிடப்படுகிறது.
நியாயாதிபதிகளின் காலம் சுமார் 350 வருடங்கள் நீடித்து சாமுவேலின் காலத்தோடு நிறைவடைந்தது.
அதன்பின் ராஜாக்களின் காலம் தொடங்கினது.
சிம்சோன் – சூரியனைப் போன்றவன்
யோசுவா இறந்துபோனபின் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யத் தொடங்கினார்கள்.
அதினால் அவர்களுக்கு விரோதமாக பல தேசங்கள் எழும்பி அவர்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி மன்றாடுவார்கள்.
தேவன் அவர்கள் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து, அவர்களை விடுவிக்கும்படி அவர்களுக்காக
நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுவார். ஒருமுறை இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தியரால்
நாற்பது வருடங்கள் கொடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். இந்த காலகட்டத்தில்தான் சிம்சோன்
பிறந்தான். சிம்சோனின் தந்தை தாண் கோத்திரத்தை சேர்ந்த மனோவா என்பவர். சிம்சோனின் பிறப்பு
ஒரு அதிசயமான நிகழ்வாக இருந்தது. சிம்சோனின் தாய்க்கு வெகுகாலமாக குழந்தைகள் இல்லாமல்
இருந்தது. அவருக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, சிம்சோனின் பிறப்பை முன்னறிவித்தான்.
அதுமட்டுமல்லாமல் அவன் நசரேயனாக வளர்க்கப்படவேண்டும் என்றும் அறிவித்தான் (நசரேய விரதத்தைப்
பற்றி தெரிந்துகொள்ள எண்ணாகமம் 6ஆம் அதிகாரத்தை வாசிக்கவும்). மேலும் சிம்சோன் இஸ்ரவேல்
ஜனங்களை பெலிஸ்தியரிடமிருந்து விடுவிப்பான் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிம்சோன் பிறந்ததிலிருந்தே
இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தை உடையவனாயிருந்தான். (சிம்சோனின் பிறப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும், மிக-இளநிலை வகுப்பு, பாடம் - 11, சிம்சோன் - தேவனுக்கென்று நசரேயன்).
பராக்கிரமசாலியான சிம்சோன்
சிம்சோன் ஒரு பராக்கிரமசாலியாய் இருந்தான். பராக்கிரமசாலி என்றால் வீரதீர செயல்களைச்
செய்யக்கூடிய பெலசாலியான மனிதன் என்று அர்த்தம். வேதாகமத்திலே சிம்சோனின் இயற்கைக்கு
அப்பாற்பட்ட பெலத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. ஒரு முறை சிம்சோன் ஒரு இடத்திற்கு சென்று
கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் அவன் மேல் பாய்ந்தது. அவன் அந்த சிங்கத்தைப் பிடித்து
அதை ஒரு ஆட்டுக்குட்டியைப் போல கிழித்துப் போட்டான்.
இன்னொரு முறை சிம்சோன் ஏதாம் ஊருக்கு
சென்றான். பெலிஸ்தர் அவனை பிடிக்க வந்தார்கள். அப்பொழுது அங்கிருந்த யூதா மனுஷர் பயந்து,
சிம்சோன் தங்கள் பட்டணத்தில் இருப்பதால் பெலிஸ்தர் தங்களை அழித்து விடுவார்கள் என்று
எண்ணினார்கள். சிம்சோன் அவர்களிடம் தன்னை இரண்டு புதுக் கயிறுகளாலே கட்டி, பெலிஸ்தரிடம்
கொண்டு போகுமாறு கூறினான். பெலிஸ்தர் கட்டப்பட்டிருந்த சிம்சோனைக் கண்ட போது, மிகவும்
மகிழ்ச்சியடைந்து ஆர்ப்பரித்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி சிம்சோனின் மேல் இறங்கினதினால்
அவன் மேல் கட்டப்பட்டிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல் போல் எரிந்து விழுந்தது.
அவன் அங்கே கீழே கிடந்த ஒரு கழுதையின் தாடையெலும்பை எடுத்து, அதினால் ஆயிரம் பெலிஸ்தரைக்
கொன்றான்.
இன்னொருமுறை சிம்சோன் காசா பட்டணத்துக்கு சென்றான். அவன் வெளியே வந்தால்
அவனை பிடிக்க வேண்டும் என்று பெலிஸ்தர் காசா பட்டணத்து வாசலிலே காத்திருந்தார்கள்.
ஆனால் சிம்சோனோ நடுராத்திரியில் எழுந்து அந்த பட்டணத்தில் வாசல் கதவுகளையும், அதின்
நிலைகளையும் பிடித்து, அதை அதின் தாழ்ப்பாள்களோடு கூடப் பெயர்த்து, அதை அருகில் இருந்த
ஒரு மலை உச்சிக்கு தன் தோள்களின் மேல் சுமந்துகொண்டு சென்றான்.
சிம்சோனின் வீழ்ச்சி
இவ்வளவு பராக்கிரமமான செயல்களைச் செய்த சிம்சோன், பின்நாட்களிலே மிகவும் தவறான
தெரிந்தெடுப்புகளை செய்ததின் மூலமாக மோசமான தோல்விகளை சந்திக்க வேண்டியதாயிருந்தது.
சிம்சோன் பிறந்ததுமுதலே நசரேயனாக பிரித்தெடுக்கப்பட்டவன். நசரேய விரதம் பொதுவாக ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கென்றே செய்யப்படும். ஆனால் சிம்சோனோ தன் வாழ்நாளெல்லாம் நசரேய
அழைப்போடு இருப்பான் என்று அவனுடைய தாயாருக்கு தேவதூதனால் அறிவிக்கப்பட்டது (நியாயாதிபதிகள்
13:5). இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு, மற்ற ஜாதிகளை விட்டு பிரித்தெடுக்கப்பட்டு
பரிசுத்தமாக வாழவேண்டும் என்பதற்காக நியாயப்பிரமாணத்தின்
மூலமாக கற்பனைகள் கொடுக்கப்பட்டது. சிம்சோன் இந்த கற்பனைகளை மட்டுமல்லாமல் தன்னுடைய
ஊழியஅழைப்பின் அடையாளமாக சில பிரதிஷ்டைகளையும் கடைபிடிக்கவேண்டியதிருந்தது. பிரதிஷ்டை
என்றால் அவனுடைய ஊழிய அழைப்பின் பாகமாக அவன் கடைபிடித்து வந்த அர்ப்பணிப்பு விதிமுறைகள்
(எடுத்துக்காட்டாக நசரேய அழைப்பின் பாகமாக தலைமுடி வெட்டப்படாமல் இருப்பது, திராட்சைசெடியிலிருந்து
செய்யப்படும் எந்த ஒரு பொருட்களையும் பயன்படுத்தாமல் இருப்பது, உயிரிழந்து போன எந்த
ஒரு பிராணிகளின் அருகிலும் செல்லாமல் இருப்பது). ஆனால் சிம்சோனோ தன்னுடைய நசரேய அழைப்பை
கனப்படுத்தாமல் தன்னுடைய பிரதிஷ்டைகளை ஒவ்வொன்றாக உடைக்கத் தொடங்கினான். சிம்சோன் இறந்து கிடந்த மிருகங்களின் அருகில் சென்று
அவைகளை பயன்படுத்தினான், அதுமட்டுமல்லாமல் பெலிஸ்திய தேசத்து பெண்ணை அவன் விரும்பி,
அவளோடு விருந்து உண்ணுவதற்காக சென்றான். இவ்வாறு சிம்சோன் கொஞ்சம், கொஞ்சமாக தேவனை
விட்டு விலகி பெலிஸ்தரிடம் சிக்கிக் கொண்டான்.
Sweet Publishing / FreeBibleimages.org.
தெலீலாள் வைத்த கண்ணி
சிறிது காலம் கழித்து சிம்சோன், தெலீலாள் என்னும் பெலிஸ்திய பெண்ணை விரும்பினான்.
இதை பெலிஸ்தியருடைய தலைவர்கள் கேள்விப்பட்டு, தெலீலாளின் மூலமாக சிம்சோனை வீழ்த்த நினைத்தார்கள்.
அவர்கள் தெலீலாளிடம் பேசி, சிம்சோனின் பலம் எதினால் உண்டாயிருக்கிறது என்று அவள் கண்டுபிடித்து
கூறினால் அவளுக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு கொடுப்பதாக
வாக்கு கொடுத்தார்கள். தெலீலாள் அதற்கு சம்மதித்தாள். அவள் சிம்சோனிடம் சென்று
அவனுடைய மகாபலத்தைப் பற்றி கேட்க ஆரம்பித்தாள். சிம்சோன் தன்னை உலராத பச்சையான ஏழு
அகணிநார்க் கயிறுகளால் கட்டினால் அடக்கிவிட முடியும் என்று கூறினான். அகணிநார் கயிறு
(Green withes or Bowstrings) என்பது விலங்குகளின் நரம்புகளை உலர வைத்து கெட்டியாக்கி
உருவாக்கப்படும் கயிறு. இறந்த ஒரு மிருகத்தின் நரம்பிலிருந்து செய்யப்படும் இந்தக்
கயிறு தீட்டானதாகும் (1) (2). உலராத அகணிநார் கயிறு என்பது நசரேயனுக்கு ஏற்காத ஒன்றாகும்.
ஆகவே அவனுடைய நசரேய பிரதிஷ்டையை முறிக்கும் ஒரு இரகசியத்தை அவன் தெலீலாளிடத்தில் வெளிப்படுத்தினான்
என்பதே உண்மை. ஆனாலும் அவன் அந்த அகணிநார் கயிற்றினால் கட்டப்பட்ட போதும் பரிசுத்த
ஆவியானவர் அவனை விட்டு முற்றும் விலகவில்லை. அவனுடைய பலம் குறையவில்லை. ஆகவே பெலிஸ்தரின்
தலைவர்கள் கட்டப்பட்டிருந்த சிம்சோனை பிடிக்க முயன்றபோது, சணல்நூலை அறுத்துப்போடுவதைப்
போல அகணிநார் கயிற்றை அறுத்துப் போட்டான்.
அகணிநார்க் கயிறு (Sinew Bowstring),
Picture credit: sensiblesurvival.blogsot.com
தெலீளாள் தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து, அவனுடைய பலத்தின் இரகசியத்தை திரும்பவும்
கேட்டபொழுது, இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாதிருக்கிற ஒரு புதிய கயிற்றினால்
தன்னைக் கட்டினால் தான் மற்ற மனிதர்களைப் போல மாறிவிடுவேன் என்று கூறினான். ஒரு வேலைக்கும்
பயன்படுத்தப்படாத புதிய பொருட்களில் ஒரு விசேஷித்த சக்தி இருப்பதாக அந்நாட்களில் நம்பப்பட்டது.
கயிற்றினால் கட்டப்படுவது என்பது சிறுமைப்படுத்தி ஒடுக்கப்படுவதற்கு அடையாளம். ஒரு
நசரேயனாக தேவனுக்கென்று பரிசுத்தமாக்கப்பட்டவனாக ஒரு விசேஷித்த அழைப்பை பெற்றவன் சிம்சோன்.
பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் இருந்தார். ஆகவே அவன் ஒடுக்கப்படுவதற்கோ, கட்டப்படுவதற்கோ
தேவன் அனுமதிக்கவில்லை. மாறாக சிம்சோனே பெலிஸ்தர் தன்னைக் கட்டி சிறுமைப்படுத்தப்படும்படிக்கு கேட்டுக் கொண்டதினிமித்தம், தன் மேலிருந்த பரிசுத்த
ஆவியை அவமதித்தான். அப்பொழுதும் பரிசுத்த ஆவியானவர் அவனை விட்டு விலகவில்லை. அவனுடைய
பலம் குறையவில்லை. அதனால் சிம்சோன் தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான்.
Sweet Publishing / FreeBibleimages.org.
தெலீலாள் சிம்சோன் தன்னை மறுபடியும் ஏமாற்றி விட்டதாக குமுறினாள். மூன்றாவது
முறையாக தெலீலாள் சிம்சோனிடம் அவனை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள்.
சிம்சோன் தெலீலாளிடம் தன்னுடைய தலைமுடியின் ஏழு ஜடைகளை நெசவு நூல் பாவோடே பின்னிவிட்டால்,
தன்னுடைய பலம் குறைந்து விடும் என்று கூறினான். தெலீலாள் சிம்சோனின் ஏழு ஜடைகளையும்
நெசவு நூல் பாவோடு பின்னிவிட்டது மட்டுமல்லாமல், அதை ஆணியடித்து உறுதியாக மாட்டியும்
வைத்தாள். நசரேய விரதம் எடுத்தவர்களின் முடி வெட்டப்படக்கூடாது, அவர்களின் ஒருமுடி
கூட பிடுங்கப்படக்கூடாது என்பதே பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டளை (3). சிம்சோனுடைய
தலைமுடி நெசவு நூல் பாவோடு பின்னப்படும்போது அது பிடுங்கப்பட்டு,
அல்லது அறுந்து போய் அவனுடைய பிரதிஷ்டை பெலவீனப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. தெலீலாள்
அறியாவிட்டாலும் சிம்சோன் தன்னை பெலவீனப்படுத்துவதற்கான வழிகளை
கூறிக்கொண்டு தான் இருந்தான். அப்பொழுதும் தேவன் அவனை விட்டு விலகவில்லை. அதனால்
பெலிஸ்தரின் தலைவர்கள் அவனை பிடிக்கும்படி வந்தபோது அவன் நெசவுஆணியையும், நூல்பாவையும்
சேர்த்து பிடுங்கிக்கொண்டு போனான்.
வெட்டப்பட்ட முடியும், முறிக்கப்பட்ட
பிரதிஷ்டையும்
மறுபடியும் தெலீலாள் சிம்சோனிடம் நான்காவது முறையாக அவனுடைய பலத்தின் இரகசியத்தைப்
பற்றி கேட்டாள். தொடர்ச்சியாக தொந்தரவு செய்து கொண்டே இருந்தாள். இறுதியில் சிம்சோன்
தெலீலாளால் மிகவும் நெருக்கப்பட்டு தன்னுடைய நசரேய அழைப்பு, பிரதிஷ்டை பற்றிய எல்லாவற்றையும்
அவளிடம் கூறினான். பிறந்தது முதல் அதுவரைக்கும் வெட்டப்படாத தன்னுடைய முடி வெட்டப்பட்டால்
தன்னுடைய பலம் முழுமையாக தன்னிடமிருந்து போய் விடும் என்றும் கூறினான். தெலீலாள் பெலிஸ்தரின்
தலைவர்களை வரவழைத்தாள். சிம்சோனின் தலைமுடியின் ஏழு ஜடைகளையும் வெட்டினாள். சிம்சோனின்
பிரதிஷ்டைகள் முழுவதுமாக உடைக்கப்பட்டு நசரேய விரதமும் முறிக்கப்பட்டது. அப்பொழுது
சிம்சோன் சிறுமைபடுத்தப்பட்டான். அவனுடைய பலம் அவனை விட்டு நீங்கி சாதாரண ஓரு மனிதனைப்
போல மாறினான். சிம்சோனோ அதை அறியாதிருந்தான். அதற்கு முன்பு பல முறை அவன் பிரதிஷ்டைகளை
மீறினபொழுது அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதபடியால் இந்த முறையும் பெலிஸ்தர் தன்னை
பிடிக்க வந்தால் அவர்களை எளிதில் மேற்கொண்டுவிடலாம் என்று எண்ணினான். ஆனால் இந்தமுறை
பெலிஸ்தரின் தலைவர்கள் அவனை பிடிக்க வந்த பொழுது, சிம்சோனால் அவர்களை மேற்கொள்ள முடியவில்லை.
பெலிஸ்தர்கள் சிம்சோனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி அவனை காசாவுக்குக் கொண்டுபோனார்கள்.
அங்கே அவனுக்கு இரண்டு வெண்கல சங்கிலிகளை மாட்டி அவனை மாவரைக்க வைத்தார்கள். தன்னுடைய
பிரதிஷ்டைகளை அவமதித்ததின் விளைவுகளை சிம்சோன் அங்கு அனுபவிக்க வேண்டியதாயிருந்தது.
பின்னர் வெட்டப்பட்ட அவனுடைய தலைமுடி வளர தொடங்கினது. ஆனால் பெலிஸ்தரோ அவனை ஒரு பொருட்டாக
எண்ணவில்லை.
சிம்சோன் - தெலீலாளின் கற்பனை அன்பு
சிம்சோன் தெலிலாளை விரும்பினான். தெலீலாள் தன்னை நேசிப்பதாக சிம்சோன் கற்பனை
செய்தானே ஒழிய, தெலீலாள் அவனை நேசித்தாள் என்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லை. தெலீலாளுக்கு
சிம்சோனின் பலம் எதில் இருக்கிறது என்று அறிவதிலேயே ஆர்வம் இருந்தது. தெலீலாள் மூன்று
முறை பெலிஸ்தரின் தலைவர்களை அழைத்து, சிம்சோனை வீழ்த்துவதற்காக அவர்களிடம் காட்டிக்
கொடுத்த போதிலும், சிம்சோன் அவளை விட்டு விலகவில்லை. சிம்சோனின் இச்சை அவன் கண்களை
மறைத்தது. இச்சை என்றால் எந்த ஒரு நபரையாவது, பொருளையாவது எப்படியாவது பெற்றுக் கொள்ள
வேண்டும் அல்லது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன், அதன் அவசியத்தையோ, தகுதியையோ, பின்விளைவுகளையோ
சிந்திக்காமல் வலுக்கட்டாயமாக பின்தொடர்வது. ஒரு மனிதன் தன்னுடைய இச்சைகளினால் இழுக்கப்படும்பொழுது,
தேவனுடைய திட்டத்திற்கு மாறான காரியங்களை செய்ய நேரிடும். இது பாவத்தைப் பிறப்பிக்கும்.
இதையே யாக்கோபு 1: 14,15 விளக்குகிறது. ஒரு மனிதன் இச்சைகள் நிறைந்த கிரியைகளை வெளிப்படுத்துவதற்கு
காரணம் சுயநல மனப்பான்மையும், இச்சையடக்கம் இன்மையுமே ஆகும். மனிதன் தன்னுடைய சுயசித்தத்தையும்,
விருப்பு வெறுப்புகளையும் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படுத்தும்போது, இச்சைகளை கீழ்ப்படுத்தி,
இச்சையடக்கத்தை வெளிப்படுத்த முடியும்.
நான்கு விதமான அன்புகள்
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும், கிறிஸ்தவ இறையியல் வல்லுணருமான சி.எஸ். லூயிஸ்
(C. S. Lewis), தான் எழுதிய “The Four Loves (நான்கு விதமான அன்புகள்)” என்கிற புஸ்தகத்திலே,
இந்த உலகத்திலே மனிதன் சகமனிதர்களிடத்திலே காண்பிக்கும் நான்கு விதமான அன்புகளைப் பற்றி
குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்டோர்கே (Storge) பெற்றோர்
– பிள்ளைகள், சகோதர – சகோதரிகள் போன்ற குடும்ப உறவினர்கள் இடையே உள்ள அன்பு
ஃபிலியா (Philia) நண்பர்கள்
காண்பிக்கும் அன்பு
எராஸ் (Eros) கணவன் மனைவி
இடையே உள்ள அன்பு
அகாபே (Agape) இது தெய்வீக
அன்பு. இது தேவனுடைய மாறாத தன்மைகளில் ஒன்றாக வெளிப்படும்
அன்பு. (4)
மனிதன், தன்னிடம் அன்பைப் பெறும் நபரைப் பொறுத்து இந்த வித்தியாசமான அன்புகளை
வித்தியாசமான அளவுகளில் வெளிப்படுத்துகின்றான். ஸ்டோர்கே, ஃபிலியா, எராஸ் ஆகிய மூன்றும்
மனிதனிடம் இயற்கையாய் காணப்படும் அன்பின் வகைகள். நாம் நேசிக்கின்ற அல்லது அக்கறை கொள்ளுகின்ற
ஒருவர் மேல் இயல்பாய் வெளிப்படுபவை தான் இவை. ஆனால் தெய்வீக அன்பாகிய அகாபே மேற்கூறிய
மூன்று விதமான அன்புகளிலிருந்தும் வித்தியாசமானது. இது மனிதனுடைய இயற்கையான சுபாவங்களுக்கு
மாறுபட்டது. இந்த அன்பு தேவனுடைய மாறாத தன்மைகளில் ஒன்றாக வெளிப்படும் அன்பு. ஒரு மனிதன்
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்போது அவன் இருதயத்தில் இந்த அன்பு கொடுக்கப்படுகின்றது
(ரோமர் 5:5). இந்த அன்பைப் பற்றி தான் 1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
கடைசி காலங்களிலே உலகத்திலும், தேவனுடைய சபையிலும் அக்கிரமம் மிகுதியாகும் போது அநேகருடைய
அன்பு தணிந்து போக வாய்ப்பிருக்கிறது. ஆகவே நாம் தேவனுடைய அன்பிலே பெருகவும், நிலைத்தோங்கவும்
கவனமாயிருக்க வேண்டும் (1 தெசலோனிக்கேயர் 3:12,13). ஒரு மனிதன் அகாபே அன்பினால் நிரப்பப்பட்டிருக்கும்போது,
அவனால் எல்லாரிடமும் சுயநலமற்ற உண்மையான, மாயமற்ற அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த
முடியும். கோபம், மூர்க்கம், பொய், எரிச்சல், பொறாமை ஆகியவை எந்தவிதமான அன்பிற்கும்,
பாசத்திற்கும் அடையாளமாகாது. அவை அகங்காரம், சுயநலம் ஆகிய தீய குணங்களின் வெளிப்பாடே
அகும்.
சிம்சோனின் முடிவு
சிம்சோனை சிறைபிடித்து சென்ற பெலிஸ்தர்கள் அவனை சிறைச்சாலையில் அடைத்தார்கள்.
தங்களுடைய மிகப்பெரிய எதிரியான சிம்சோனை வீழ்த்தியதைக் கொண்டாடுவதற்காக அவர்கள் தாங்கள்
வணங்கி வந்த தாகோன் என்கிற கடவுளுடைய கோயிலிலே கூடினார்கள். அப்பொழுது அவர்கள் பொழுது
போக்கிற்காக வேடிக்கை காட்டும்படி சிம்சோனை அழைத்து வர ஆட்களை அனுப்பினார்கள். தலைமுடி
வெட்டப்பட்டு, இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய் சிம்சோனைக்
கொண்டு வந்து அந்த கட்டிடத்தின் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள். சிம்சோன், இஸ்ரவேல்
ஜனங்களை பெலிஸ்தரிடமிருந்து விடுவிப்பதற்காக தேவனிடமிருந்து தான் பெற்ற விசேஷ அழைப்பையும்,
பலத்தையும் இழந்து எதிரிகளால் அவமதிக்கப்படுவதைக் குறித்து மனஸ்தாபப்பட்டிருப்பான்.
சிம்சோன் கடைசியாக ஒருமுறை தேவனிடம் விண்ணப்பித்து, தன் கண்களுக்காக பழி வாங்கும்படி
தனக்கு உதவி செய்யுமாறு கேட்டான். பின்னர் அந்த வீட்டைத் தாங்கியிருந்த இரு தூண்களையும்
தன் கைகளால் பலமாய் சாய்த்தான். அந்த வீடு இடிந்து விழுந்து,
அதில் சிம்சோனை வேடிக்கை பார்க்க வந்திருந்த சுமார் மூவாயிரம் பெலிஸ்திய ஆண்களும்,
பெண்களும் கொல்லப்பட்டார்கள். அவர்களோடே கூட சிம்சோனும் மடிந்தான்.
சிம்சோனின் வாழ்க்கை கற்பிக்கும் பாடம்
சிம்சோனுடைய சில தற்காலிகமான தெரிந்தெடுப்புகள் அவனுடைய வாழ்க்கையில் நிரந்தரமான
விளைவுகளைக் கொண்டு வந்தது. நேரான பாதைகளை நோக்காமல், தாறுமாறான பாதைகளுக்கு சிம்சோனை
அழைத்து சென்ற அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டது. சிம்சோன் தன்னுடைய விசேஷ ஊழிய அழைப்பின்
அடையாளமாகவும், வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கைக்கு அடையாளமாகவும் கடைபிடித்து வந்த பிரதிஷ்டைகளை
அலட்சியம் செய்து, மற்ற ஜனங்கள் செய்வது போன்று தானும் செய்யத் தொடங்கினான். அவனுடைய
பிரதிஷ்டைகளை ஒவ்வொன்றாய் அவன் மீறின பொழுது, ஆரம்பத்தில் எந்த வித பாதிப்புகளையும்
அவன் அனுபவிக்காவிட்டாலும், அவன் அர்ப்பணிப்புகளை மனப்பூர்வமாய் மீறி நடந்து, அவனுடைய
பாவம் முழுமையடைந்தபொழுது, அவன் திரும்பி வர முடியாத அளவிற்கு கொடிய விளைவுகளை சந்திக்க
நேர்ந்தது. தேவனால் விசேஷமாக தெரிந்தெடுக்கப்பட்டு, இயற்கைக்கு
அப்பாற்பட்ட பலத்தைப் பெற்றிருந்த சிம்சோன், அதை தன் இச்சைகளை நிறைவேற்றுவதற்காக
தவறாக பயன்படுத்தினதினிமித்தம் அவையெல்லாவற்றையும் இழக்க நேரிட்டது.
பல வண்ண ஓட்டுத்துண்டுகளை இணைத்து செய்யப்படும் மொசெய்க் வேலைப்பாட்டில் பொறிக்கப்பட்டுள்ள சிம்சோனின் கதை, கலிலேயா பட்டணத்தில் ஹுகோக் என்ற இடத்தில் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த யூத தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது,
Picture credit: Biblicalarchaeology.org
ஆதார நூற்களின் பட்டியல்:
1.
Orr, James, M.A., D.D. General Editor. "Entry
for 'WITHES, WITHS, GREEN'". "International Standard Bible
Encyclopedia". 1915.
2.
Clarke, Adam. "Commentary on Judges
16:7". "The Adam Clarke Commentary".
https://www.studylight.org/commentaries/acc/judges-16.html. 1832.
3.
Posner, M. The Nazir and the Nazirite vow. https://www.chabad.org/library/article_cdo/aid/287358/jewish/The-Nazir-and-the-Nazirite-Vow.htm
4.
Lewis, C. S. (1960). The four loves. New York:
Harcourt, Brace, 1960.
இந்த ஆதார நூற்களிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.
வேதபகுதி: நியாயாதிபதிகள்
13 - 16
மனப்பாட வசனம்: 1 யோவான்
2:16, 17
இதற்கு முந்தின பாடத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும், உயர்நிலை வகுப்பு, பாடம் - 13, கானானைக் கைப்பற்றிய யோசுவா
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1.
நியாயாதிபதிகளின் காலம், யோசுவாவிற்குப் பின் இஸ்ரவேல்
ஜனங்களை வழிநடத்தின ……………………………… காலத்திலிருந்தே கணக்கிடப்படுகிறது.
2.
ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, சிம்சோனின் பிறப்பை முன்னறிவித்து,
அவன் …………………………………. வளர்க்கப்படவேண்டும் என்றும் அறிவித்தான்
3.
தெலீலாள் சிம்சோனின் பலத்தின் இரகசியத்தை கண்டுபிடித்தால்,
அவளுக்கு ………………………………………………… கொடுப்பதாக வாக்கு கொடுத்தார்கள்.
4.
வீடு இடிந்து விழுந்து, சிம்சோனை வேடிக்கை பார்க்க வந்திருந்த
சுமார் ……………………………….. பெலிஸ்திய ஆண்களும், பெண்களும் கொல்லப்பட்டார்கள்
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. சிம்சோன்
மேல் ஒரு சிங்கம் பாய்ந்தபோது அவன் செய்தது என்ன?
2. மூன்றாவது
முறையாக சிம்சோன் தன்னுடைய பலத்தின் காரணமாக தெலீலாளுடம் கூறியது என்ன?
3. பெலிஸ்தர்
சிம்சோனை பிடித்தபொழுது அவனுக்கு செய்தது என்ன?
4. சிம்சோன் தன்
கண்களுக்காக பெலிஸ்தரிடம் எவ்வாறு பழி வாங்கினான்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
ஒரு மனிதன் சகமனிதர்களிடத்தில் செலுத்தும் நான்கு
விதமான அன்புகள் எவை? தெய்வீகமான அகாபே அன்பைப் பற்றி எழுதவும்.