Wednesday, September 2, 2020

முன்னுரை (Introduction)

 கர்த்தருக்குள் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு,

நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

“யாக்கோபின் ஏணி ஞாயிறு பள்ளி பாடங்கள் (Jacob’s Ladder Sunday School Lessons)” என்கிற தமிழ் மற்றும் ஆங்கில ஞாயிறு பள்ளி பாடங்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஞாயிறு பள்ளி பாடங்கள் பாலர் பள்ளி முதல் உயர்நிலை வகுப்பு வரை (3 வயது முதல் 15 வயது வரை) உள்ள பள்ளி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வேதபாடங்களை அந்தந்த வயதில் உள்ள குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த ஞாயிறுபள்ளி பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பாகங்கள் (2 – Parts) உள்ளன. ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் 40 பாடங்கள் உண்டு. 

இந்த பாடங்கள்  திரித்துவ  (Trinitarian) - பெந்தெகொஸ்தே (Pentecostal) உபதேசங்களின் அடிப்படையிலே இருக்கும். இந்த ஞாயிறு பள்ளி பாடங்கள் 2008ஆம் ஆண்டு, நான் ஒரு சபையின் ஞாயிறுபள்ளி ஆசியையாய் இணைந்த பொழுது, அந்த தேசத்தில் எந்த ஒரு ஞாயிறு பள்ளி புத்தகங்களோ, பாடங்களோ இல்லாத காரணத்தினால், அதை பதிவிறக்கம் கூட செய்ய முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், இந்த ஞாயிறுபள்ளி பாடங்களை உருவாக்க ஆரம்பித்தோம். இயன்ற அளவில் எல்லா பாடங்களையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்றும் நாங்கள் பிரயாசப்படுகிறோம். 

இந்த பாடங்கள் மிகவும் பிரயாசத்தோடும், கவனத்தோடும்,  உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாடபுத்தகங்களில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள எந்த ஒரு கருத்தையும் மாற்றாமல் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கான வசனஆதாரங்களும் அருகே குறிக்கப்பட்டிருக்கும். அதனோடு கூட அதை புரிந்து கொள்ளும் வகையில் வரலாற்று ஆதாரங்களும் மற்றும் தலைசிறந்த வேதபண்டிதர்களின் விளக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான ஆதார நூற்களின் பட்டியலும் (Reference List) பாடங்களின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாடங்களில் எழுத்துபிழைகளோ, மற்றும் வேறு ஏதாவது பிழைகளைக் கண்டால், அதை jacobsladdermin@gmail.com என்கிற  E-mail க்கு ஞாயிறுபள்ளி வகுப்பின் பெயர், பாட எண், பக்க எண் ஆகியவைகளை குறிப்பிட்டு, பிழைகளை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்! 

அதுமட்டுமல்லாமல்

1.    ஞாயிறு பள்ளிகளை நடத்துவது எப்படி (ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

2.    ஞாயிறு பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்வது எப்படி (ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

3.    சிறுவர் ஊழியத்திற்கான அழைப்பு ஒருவருக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுவது எப்படி(ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

4.    குழந்தைகளை ஞாயிறு பள்ளிகளுக்கு (குறிப்பாக வாலிபப் பிள்ளைகளை) அனுப்பும் பெற்றோர்களுக்கான அறிவுரைகள் (ஞாயிறுபள்ளி வழிமுறைகள் / Sunday School Guidelines)

5.    விடுமுறை வேதாகம பள்ளி, Children’s Retreat / Camp ஆகியவற்றை நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பாடங்கள் (விடுமுறை வேதாகம பள்ளி / VBS / Children’s Retreat)

6.    குழந்தைகள் வாசிப்பதற்கான சிறந்த கிறிஸ்தவ புஸ்தகங்கள், மிஷனெரி வரலாறுகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் / தலைவர்கள் ஆகியோரது வரலாறுகள் (கிறிஸ்தவ தகவல்கள் / கிறிஸ்தவ இலக்கியங்கள் / Christian Literature)

போன்றவைகளும் இந்த வலைப்பதிவில் எங்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் பதிவேற்றப்படும். மேலே முன்னிலைப்படுத்தி(Highlight) காட்டப்பட்டிருக்கிற சிறப்பு சொற்களை (Keywords) வலைப்பதிவின் (blog) வலப்புறம் மேற்பக்கத்தில் உள்ள தேடல்பட்டியில் (Search bar) இட்டால் அது சம்பந்தமான வலைபதிவுகள் எல்லாம் கிடைக்கும்.

தற்பொழுது பதிவேற்றப்பட்டிருக்கிற பாடங்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஞாயிறு பள்ளிகளை 6 வகுப்புகளாக பிரித்து பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.    மழலையர் வகுப்பு (Pre-kinder Class) – 3 வயதும் அதற்கு கீழும்

2.    பாலர் வகுப்பு (Kinder Class) – 4 & 5 வயது

3.    ஆரம்ப வகுப்பு (Primary Class) - 6 & 7 வயது

4.    மிக இளநிலை வகுப்பு (Sub-junior Class) - 8 & 9 வயது

5.    இளநிலை வகுப்பு (Junior Class) - 10 & 11 வயது

6.    இடைநிலை வகுப்பு (Intermediate Class) - 12 & 13 வயது

7.    உயர்நிலை வகுப்பு (Senior Class) - 14 & 15 வயது 

மழலையர் வயதில் (Pre-school) விளையாட்டு முறைகளை பயன்படுத்தியும், படங்களைப் பயன்படுத்தியும் பாடங்கள் கற்பிக்க வேண்டியதிருப்பதால், அவற்றிற்கான வழிமுறைகளும் பாடங்களும் பின்னர் பதிவேற்றப்படும். 16 வயது முதல்- 21 வயது வரை உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்களை ஞாயிறு பள்ளிகளோடு இணைக்காமல் வாலிபர் ஐக்கியத்தில் இணைத்து (இளநிலை வாலிப வகுப்புகளாக Junior Youth Classes) அவர்களுக்கேற்ற அறிவுரைகளை கூறுவது அவர்களுக்கு நன்மை பயக்கும். 

பாடங்களின் அட்டவணை

 

பாலர் வகுப்பு (Kinder Class)

ஆரம்ப வகுப்பு (Primary Class)

1 – பரிசுத்த வேதாகமம்

2 – தேவன் உலகத்தைப் படைத்தார்

3 – காயீனும் ஆபேலும்

4 - நோவாவின் பேழை

5 – யாக்கோபின் கனவு

6 – யோசேப்பின் பலவருண அங்கி

7 – குழந்தை மோசேயின்      நாணற்பெட்டி

8 – மன்னா: வானத்து அப்பம்

9 – மாராவின் தண்ணீர்

10 - சங்கீதம் 23 (மனப்பாடம் செய்க)

1 – சிருஷ்டிப்பின் ஏழு நாட்கள்

2 - ஏவாள் பாம்பினால்

      வஞ்சிக்கப்படுதல்

3 - ஆபிராமும் லோத்தும்

4 – ஈசாக்கும் அபிமெலேக்கும்

5 – ஏசாவின் சேஷ்ட புத்திரபாகம்

6 – யோசேப்பின் தானியக்      களஞ்சியம்

7 – பாம்பாக மாறின மோசேயின்      கோல்

8 – அக்கினி ஸ்தம்பமும் மேக      ஸ்தம்பமும்

9 – துளிர்த்த ஆரோனின் கோல்

10 - சங்கீதம் – 8 (மனப்பாடம் செய்க)

 பாடங்களின் அட்டவணை (தொடரப்பட்டுள்ளது)

 

மிக இளநிலை வகுப்பு (Sub-junior)

இளநிலை வகுப்பு (Junior Class)

1 – உலகின் முதல் மனிதர்கள்

2 - ஆபிரகாம் தேவனால்

     சோதிக்கப்படுதல்

3 – போராடி மேற்கொண்ட     யாக்கோபு

4 – தீயசகோதரர்களை மன்னித்த     யோசேப்பு

5 – தேவனுக்குப் பயந்த     மருத்துவச்சிகள்

6 – மீதியான் தேசத்தில் மோசே

7 – அடிக்கப்பட்ட கன்மலை

8 - மிரியாமின் குஷ்டரோகம்

9 – பின்னிட்டுத் திரும்பின யோர்தான் நதி

10 - சங்கீதம் 91 (மனப்பாடம் செய்க)

1 - மனிதனின் முதல் பாவம்

2 – நோவா காலத்து வெள்ளம்

3 – பாபேல் கோபுரம்

4 – பத்து நீதிமான்கள்       காணப்பட்டாலோ?

5 – என்னைக் காண்பவரை கண்டேன்

6 – யாக்கோபும் லாபானும்

7 – பார்வோனின் கனவு

8 – ஆரோன் செய்த பொன்               கன்றுகுட்டி

9 – தேவனுடைய மகிமையைக் கண்ட மோசே

10 - சங்கீதம் 115 (மனப்பாடம் செய்க)

 

 பாடங்களின் அட்டவணை (தொடரப்பட்டுள்ளது)

 

இடைநிலை வகுப்பு (Intermediate)

உயர்நிலை வகுப்பு (Senior Class)

1 – பரிசுத்த வேதாகமத்தின்      புஸ்தகங்கள்

2 – பஞ்சாகமங்கள்

3 – ஆபிரகாமின் பிரயாணம்

4 – ஈசாக்கின் ஆசீர்வாதம்

5 – யோசேப்பு சகோதரர்களை      சோதித்தல்

6 – மோசே: பார்வோனுடைய      குமாரத்தியின் மகன்

7 – ஆரோன்: முதல் பிரதான      ஆசாரியன்

8 –  நாற்பது வருட வனாந்திர தண்டனை

9 – கோராகின் கலகம்

10 - நாவை அடக்குதல் - யாக்கோபு      3:1-18 (மனப்பாடம் செய்க)

1 – பரிசுத்த வேதாகமம்: தேவனின்      விலைமதிப்பற்ற பொக்கிஷம்

2 – பரிசுத்த திரித்துவம்

3 – பரிசுத்த திரித்துவத்தைப் பற்றிய துர்உபதேசங்கள், நைசியா       விசுவாசப்பிரமாணம்

4 – தேவனுடைய நாமங்கள்

5 – தூதர்கள், சாத்தான், சாத்தானின்      திரித்துவம்

6 - முதல் பாவமும், தேவனுடைய     இரட்சிப்பின் திட்டமும்

7 – ஆபிரகாமுடன் தேவனுடைய      உடன்படிக்கை

8 – யாக்கோபும், இஸ்ரவேலின்      பன்னிரண்டு கோத்திரங்களும்

9 – எகிப்தின் பத்து வாதைகள்

10 - சங்கீதம் – 46 (மனப்பாடம் செய்க)

இந்த பாடங்களையும் பதிவேற்றி முடித்தபின் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய (Link)ஐ கீழே கொடுக்கிறோம். 

கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக!

                                                                                                       

தேவதூதர்கள், சாத்தான், சாத்தானின் திரித்துவம் (Angels, Satan & Satanic Trinity), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                            மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

பாடம்- 5

தேவதூதர்கள், சாத்தான், சாத்தானின் திரித்துவம்

தேவதூதர்கள் (Angels):

தேவதூதர்கள் தேவனால் படைக்கப்பட்டவர்கள். தேவதூதர்கள் என்பதற்கு எபிரெய மொழியில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை “மலாக் (mal’ak)”, கிரேக்க மொழியில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை “ஏஞ்சலோஸ் (Angelos)” என்பதாகும். அதற்கு “தூதுவர்கள் அல்லது செய்தியை கொண்டு வருபவர்கள் (Messengers)” என்று அர்த்தம். ஆதியாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிருஷ்டிப்பின் வரலாற்றில் தேவதூதர்கள் படைக்கப்படுவதை பற்றி எதுவும் கொடுக்கப்படாவிட்டாலும், ஆண்டவர் பூமியை அஸ்திபாரமிடும்பொழுது தூதர்கள் கெம்பீரித்துப் பாடினதாக யோபு 38: 4-7 ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தேவதூதர்கள் பூமியைப் படைப்பதற்கு முன்னரே படைக்கப்பட்டார்கள் என்று கருதப்படுகின்றது. தேவதூதர்கள் மனிதர்களை விடவும் வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்கள் மரித்தபின் தேவதூதர்களாக மாறுவார்கள் என்று சொல்லப்படுவதற்கு வேதாகமத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லை. 

தேவனுடைய மற்ற எல்லாப் படைப்புகளையும் போல தேவதூதர்களும் தேவனுடைய சித்தத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். தேவதூதர்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு “உதவி செய்கிற ஆவிகள்” என்று வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது (எபிரெயர் 1:14). தேவதூதர்கள் தேவனை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் பலவிதமான தேவதூதர்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

1.    பிரதான தூதன்(1 தெசலோனிக்கேயர் 4:16; கொலோசெயர் 1:16,17)

2.    பணிவிடை தூதர்கள் (Ministering Angels) - எபிரெயர் 1:14

3.    கேரூபீன்கள் (Cherub) - சங்கீதம் 18:10

4.    சேராபீன்கள் (Seraph) - ஏசாயா 6:3

பிரதான தூதன் (Archangel):

தேவதூதர்களில் மிகவும் முக்கியமாக வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருப்பது “பிரதான தூதன்” ஆகும். வேதாகமத்தில் பிரதான தூதன் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டிருப்பது “மிகாவேல் (Michael)” மாத்திரம் தான். ஆனால் பல வேத பண்டிதர்கள் காபிரியேலையும் பிரதான தூதனாக கருதுகின்றனர். 

கேரூபீன்கள் (Cherubim):

பரிசுத்த வேதாகமத்தில் கேரூபீன்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற இடங்களிலெல்லாம், பரிசுத்த பொருட்களையும், இடங்களையும் (ஜீவ விருட்சம், ஆசரிப்புக்கூடாரம்) பாதுகாக்கிற ஜீவன்களாகவே அவைகள் காட்டப்பட்டுள்ளன. கேரூபீன்களுக்கு நான்கு முகங்கள் (மனிதன், எருது, சிங்கம், கழுகு) உண்டு. அவைகளுக்கு நான்கு சிறகுகள் இருந்தன. அவைகள் முழுவதும் கண்களால் மூடப்பட்டிருக்கும். அவைகளுடைய உடலமைப்பு சிங்கத்தைப் போலவும், கால்கள் எருதைப் போலவும் இருக்கும். இவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆதியாகமம் 3:24; யாத்திராகமம் 25:17 – 22; 2 நாளாகமம் 3:7–14; எசேக்கியேல்10:12–14, 28:14–16; 1 ராஜாக்கள் 6:23–28 ஆகிய வேதபகுதிகளை வாசிக்கவும்.

(குழந்தைகள் பார்க்கின்ற கார்ட்டூன் படங்களில் கேரூப் என்கின்ற பெயரில் நாம் பார்க்கின்ற பொம்மைகள் கேரூப் அல்ல. அவைகள் ஐரோப்பா தேசங்களில் குழந்தைகள் வடிவில் உள்ள புட்டி (Putti) என்கின்ற ஒரு கிராமப்புறத்துகதைகளின் கதாப்பாத்திரமாகும்) 

சேராபீன்கள் (Seraphim):

சேராபீன்கள் (ஒருமையில் “சேராப்”) என்கிற பெயர்களின் அர்த்தமே “எரிகின்றவைகள் (Burning ones)” என்பதாகும் . சேராப் என்கிற வார்த்தை எபிரெய மொழியில் “சர்ப்பத்தை” குறிப்பதற்குகே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 6:1-8 வசனங்களில் ஆறு சிறகுகளையுடைய ஜீவன்களாக சொல்லப்பட்டுள்ளன. அவைகள் இரண்டு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடி, இரண்டு சிறகுகளால் தங்கள் கால்களை மூடி, இரண்டு சிறகுகளால் பறந்து, ஒருவரையொருவர் பார்த்து “ சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று கூறின. 

விழுந்துபோன தூதர்கள்:

லூசிபர் என்பவன் தேவனால் படைக்கப்பட்டு காப்பாற்றுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப். “லூசிபர்” என்பது “அதிகாலையின் மகன் (morning star)” என்று தமிழில் ஏசாயா 14:12ல் கொடுக்கப்பட்டதற்கான லத்தீன் வார்த்தையாகும். லூசிபர் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தான். மற்ற சில தூதர்களும் அவனோடே கூட சேர்ந்துகொண்டார்கள். அதனால் லூசிபரும் அவனோடே சேர்ந்த தூதர்களும் கீழே தள்ளப்பட்டுபோனார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட மேன்மையை காத்துக் கொள்ளாமல், தாங்கள் இருக்க வேண்டிய ஸ்தானத்தை விட்டுவிட்டு, தேவனுடைய ஸ்தானத்திற்கு ஏற முயன்றதால் தேவன் அவர்களை கீழே தள்ளி, நியாயத்தீர்ப்பின் நாளுக்கென்று, நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருப்பதாக வேதாகமம் கூறுகிறது. 

ஒரே மனிதனாகிய ஆதாம் செய்த பாவத்தினால் எல்லா மனிதர்களும் பாவத்திற்கு உள்ளாக்கப்பட்டது போல் அல்லாது, தேவ தூதர்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய மீறுதலினாலேயே தள்ளப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நரகம் என்பது பிசாசிற்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்ட ஒன்றாகும் (மத்தேயு 25:41). பொதுவாக விழுந்து போன லூசிபரே பிசாசாக மாறினான் என்று கூறப்பட்டாலும் வேதத்தில் வெளிப்படையாக அவ்வாறு எங்கும் கூறப்படவில்லை. 

சாத்தான்:

சாத்தானுடைய ஆரம்பத்தைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் எதுவும் கொடுக்கப்படவில்லை. சாத்தானுக்கு பழைய பாம்பு, பிசாசு, குற்றஞ்சாட்டுபவன், உபாதிக்கிறவன் என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவனுடைய தன்மை எவ்வாறு வெளிச்சமாய் இருக்கிறதோ, அதுபோல பிசாசின் தன்மை என்பது இருள் ஆகும். பலர் தேவனுக்கு சமமான எதிர்மறை தன்மை (Dualistic Opposite) கொண்டவனே சாத்தான் என்று கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. சாத்தான் சர்வவல்லவன் அல்ல. அவனுக்கு சில வல்லமைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் செய்து நிறைவேற்றும் திறன் அவனுக்கு கிடையாது. அது போல எல்லாவற்றையும் அறியும் திறனும் அவனுக்கு கிடையாது. அவன் தேவனுக்கு எள்ளளவும் சமமானவன் அல்ல. அவனுக்கு சொந்தமாய் சிந்தித்து படைக்கும் திறன் மிகவும் சொற்பமே, அதனாலே தான் அவன் தேவன் செய்யும் எல்லா கிரியைகளையும் போலியாய் செய்து ஜனங்களை வஞ்சிக்கிறான். 

சாத்தானுக்கு “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்கிற இன்னொரு பெயரும் உண்டு. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையினாலே சாத்தானுக்கு அடிமைப்பட்டபொழுது, இந்த உலகம் சாத்தானுக்கு அடிமைப்பட்டது. இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய ராஜ்யத்தைப் போலவே பிசாசும் ஒரு போலியான ராஜ்யத்தை ஆளுகிறான். நாம் வாழும் இந்த உலகத்தின் எல்லா அதிகாரங்களும் அவனுக்கு கொடுக்கப்படவில்லை. தானியேல் 4:32ல் “உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் முடிவற்றவர், அவருக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஆனால் சாத்தானுக்கு முடிவு உண்டு. அவனுடைய ஆரம்பத்தைப் பற்றி நமக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், அவனுடைய முடிவைப் பற்றி வேதாகமத்தில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

சாத்தானின் திரித்துவம்:

தேவனுடைய திரித்துவம் என்பது தேவனுடைய எல்லா பரிபூரணத்தையும் குறிக்கிறது. அதுபோலவே சாத்தான் ஒரு போலியான திரித்துவத்தோடு செயல்படுவதை நாம் வேதாகமத்தில் பார்க்கமுடியும். இதை தேவனுடைய பரிசுத்த திரித்துவத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதை “சாத்தானின் திரித்துவம்” என்று அழைக்கிறோம். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு எவ்வாறு அனுப்புகிறாரோ அவ்வண்ணமே பிசாசும் தன்னுடைய அந்திகிறிஸ்துவை அனுப்புகிறான்.

                தேவனுக்கு எதிர்மறை                   – சாத்தான் (வலுசர்ப்பம்)

                இயேசு கிறிஸ்துவின் எதிர்மறை – அந்திகிறிஸ்து (மிருகம்)

                பரிசுத்த ஆவிக்கு எதிர்மறை          -  கள்ள தீர்க்கதரிசி (1)

 

பரிசுத்த திரித்துவம்

சாத்தானின் திரித்துவம்

பிதாவாகிய தேவன்

சாத்தான் / வலுசர்ப்பம்

குமாரனாகிய தேவன்

அந்திகிறிஸ்து (மிருகம்)

பரிசுத்த ஆவியாகிய தேவன்

கள்ள தீர்க்கதரிசி

தேவனுடைய சிங்காசனம் (வெளி 22:1)

சாத்தானிடைய சிங்காசனம் (வெளி 2:13)

கிறிஸ்துவின் சபை

சாத்தானுடைய கூட்டம் (வெளி 2:9; 3:9)

சபை -கிறிஸ்துவின் மணவாட்டி (எபேசி 5:25-27).

வேசிமார்க்க சபை – அந்திகிறிஸ்துவின் மணவாட்டி (வெளி 17:1-16).

கிறிஸ்துவின் உபதேசம்

பிசாசின் உபதேசம் (I தீமோத் 4:1)

கிறிஸ்துவின் பாத்திரம்கர்த்தருடைய பந்தி (I கொரிந் 10:16; 11:25)

பிசாசுகளின் பாத்திரம் (I கொரிந் 10:21).

தேவபக்தியின் இரகசியம் (I தீமோத் 3:16)

அக்கிரமத்தின் இரகசியம் (II தெசலோ 2:7)


சாத்தானுடைய திரித்துவத்தின் முடிவு, உபத்திரவ கால முடிவுக்குப்பின் இருக்கும். அப்பொழுது வலுசர்ப்பம், மிருகம், கள்ள தீர்க்கதரிசி அனைவரும் அக்கினியும், கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:10).

மனப்பாட வசனம்: பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். 

ஆதார நூற்களின் பட்டியல்:

1.    Larkin, Clarence. Dispensational Truth. Philadelphia: Rev. Clarence Larkin Est., 1920. 176 pp.

 

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதார நூலிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    தேவதூதர்களைக் குறிப்பதற்கு எபிரெய மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை “……………………” என்பதாகும்.

2.    பரிசுத்தவேதாகமத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பிரதானதூதன் …………………………. ஆகும்.

3.    “………………………..” என்பது தமிழில் “அதிகாலையின் மகன்” என்று கொடுக்கப்பட்டுள்ளதன் லத்தீன் மொழிபெயர்ப்பாகும்.

4.    …………………………..அந்திகிறிஸ்துவின் மணவாட்டி ஆகும்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  சேராபீன்கள் தேவனை எவ்வாறு ஆராதிக்கிறார்கள்?

 

2.  கேரூப் என்பது யார்?

 

3.  லூசிபர் ஏன் கீழே தள்ளப்பட்டான்?

 

4.  சாத்தான் ஏன் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று அழைக்கப்படுகிறான்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. தேவதூதர்களைப் பற்றியும் அவர்களின் வெவ்வேறு பிரிவுகளைப் பற்றியும் சொல்லவும்?

  

 

 

 

Tuesday, September 1, 2020

யோசேப்பு சகோதரர்களை சோதித்தல் (Joseph Tests His Brothers), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                       இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 5

யோசேப்பு சகோதரர்களை சோதித்தல்

யோசேப்பு ஈசாக்கின் பேரன், யாக்கோபுடைய மகன். அவனுக்கு பத்து மூத்த சகோதரர்களும், ஒரு மூத்த சகோதரியும், ஒரு இளைய சகோதரனும் இருந்தார்கள். யோசேப்பின் தாயார் அவனுடைய இளைய சகோதரன் பிறக்கும்பொழுது மரித்து விட்டார்கள். அவனுடைய தகப்பனார் அவனிடம் மிகவும் அன்பு செலுத்தினார். அவனுக்கு மிகவும் சிறப்பான பல வருணங்களுள்ள ஒரு அங்கியை செய்து கொடுத்தார். அதனால் அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமை கொண்டார்கள். 

யோசேப்பின் கனவுகள்:

யோசேப்பு இரண்டு கனவுகளைப் பார்த்து அதை தன் சகோதர்களிடம் சொன்னான். ஒரு கனவில், அவன் தானியங்களை கட்டிக் கொண்டிருந்ததாகவும், அப்பொழுது அவனுடைய தானியக்கட்டு நிமிர்ந்து நின்றதாகவும், அவனுடைய சகோதரர்களுடைய தானியக்கட்டுகள் அவனுடைய தானியக்கட்டை சுற்றி வணங்கி நின்றதாகவும் கண்டான். நீ எங்களை ஆளுகை செய்யப் போகிறாயோ என்று கூறி அவனைப் பகைத்தார்கள். அவன் இன்னொரு கனவையும் கண்டான். அதில் சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் அவனை வணங்கினதாகக் கண்டான். இந்த சொப்பனத்தை அவன் தந்தை கேட்டபொழுது அவருக்கும் கூட அதிர்ச்சியாக இருந்தது. நீ என்ன கனவு காண்கிறாய், நானும் உன் தாயாரும் உன்னை வணங்க வருவோமோ? என்று அவன் மேல் கோபங்கொண்டார். 

யோசேப்பின் பொறாமை கொண்ட சகோதரர்கள்:

ஒருநாள் யோசேப்பின் சகோதரர்கள் ஆடு மேய்க்க சென்றிருந்தபொழுது, அவனுடைய தகப்பன் அவனை அவனுடைய சகோதரர்களை நலம் விசாரித்து வரும்படி அனுப்பினார்.  அவனுடைய சகோதரர்கள் அவன் தூரத்தில் வருவதைப் பார்த்தவுடனேயே அவனைக் கொலை செய்யும்படி திட்டம் தீட்டினார்கள். ஆனால் அவனுடைய மூத்த சகோதரனான ரூபன் அவன் மேல் இரக்கமுற்று, அவர்கள் கையிலிருந்து அவனை காப்பாற்றினான். அதனால் அவனுடைய மற்ற சகோதரர்கள் சேர்ந்து அவனைக் கொல்லாமல், அந்த வழியே சென்ற மீதியானிய வியாபாரிகளிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். பின்பு அவர்கள் ஒரு ஆட்டைக் கொன்று யோசேப்பினுடைய பலவருண அங்கியை அதில் நனைத்து, அவனுடைய தகப்பனிடத்தில் காட்டி ஏதோ ஒரு காட்டு மிருகம் யோசேப்பைக் கொன்று போட்டதாகக் கூறினார்கள். 

எகிப்தில் இரண்டாம் முக்கிய நபராக உயர்ந்த யோசேப்பு:

யோசேப்பை எகிப்திற்கு கொண்டு சென்ற மீதியானிய வியாபாரிகள் அவனை போத்திபார் என்கிற பார்வோனுடைய ஒரு அதிகாரியிடம் விற்றார்கள். ஒரு நாள் போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறினாள். அதனால் யோசேப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். ஆனால் சிறைச்சாலையிலும் ஆண்டவர் யோசேப்பை கைவிடவில்லை. எகிப்தின் மன்னனான பார்வோன் ஒரு நாள் ஒரு கனவு கண்டான். அந்த கனவின் அர்த்தத்தை யாராலும் சொல்லமுடியவில்லை. யோசேப்புக்கு அந்த கனவின் அர்த்தத்தை அறிந்து கொள்ள ஆண்டவர் உதவி செய்தார். பார்வோனுடைய கனவின் மூலம் எகிப்து தேசத்தில் ஏழு வருடம் பஞ்சம் வரப் போகிறது என்றும், அதற்குமுன் ஏழு வருடம் செழிப்பான வருடங்கள் இருக்கும் என்றும் தெரிந்து கொண்டார்கள். அதனால் தேவையான உணவு பொருட்களை சேர்த்து வைத்துக் கொண்டார்கள். 

உணவிற்காக எகிப்து தேசத்திற்கு வந்த யோசேப்பின் சகோதரர்கள்:

யோசேப்பின் சகோதரர்கள் வாழ்ந்த கானான் தேசத்திலும் பஞ்சம் வந்தது. யோசேப்பினுடைய மூத்த சகோதரர்கள் எகிப்து தேசத்தில் உணவு கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு உணவு வாங்குவதற்காக எகிப்திற்கு போனார்கள். அப்பொழுது எகிப்தில் அதிகாரியாயிருந்த யோசேப்பிடத்திலிருந்து அவர்கள் தானியம் வாங்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தானியத்தை விற்றுக்கொண்டிருந்தது தங்கள் சகோதரனான யோசேப்பு என்பது தெரியவில்லை. யோசேப்புக்கோ தன்னுடைய சகோதரரை அடையாளம் தெரிந்து விட்டது. ஆனால் அவன் தன்னுடைய சகோதரர்கள் இன்னும் பழைய குணங்களோடு தான் இருக்கிறார்களா அல்லது மாறி விட்டார்களா என்று அறிந்து கொள்ள விரும்பினான். அதனால் அவர்களுக்கு சில பரீட்சைகளை வைத்தான்.

யோசேப்பு தன் சகோதரர்களை கடினமாக நடத்துதல்:

யோசேப்பு முதலாவது தன் சகோதரர்களிடம் தான் அவர்களை நம்பாதது போல காண்பித்தான். அவன் அவர்களை உளவாளிகள் என்றும் எகிப்து தேசம் எங்கு திறந்திருக்கிறது என்று பார்க்க வந்திருப்பதாகவும் குற்றஞ் சாட்டினான். அவர்களோ தாங்கள் உண்மையிலேயே தானியம் வாங்க வந்திருப்பதாகவும், அவர்களுக்கு வயதான தகப்பனும், ஒரு இளைய சகோதரனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது யோசேப்பு அங்கு வந்தவர்களிலே இளையவனான சிமியோன் என்கிற தன்னுடைய சகோதரனை சிறையில் அடைத்துவிட்டு, தன்னுடைய மற்ற சகோதரர்களிடம் நீங்கள் தானியம் கொண்டு போய் உங்கள் குடும்பத்திடம் கொடுத்துவிட்டு, திரும்ப வரும்பொழுது உங்களுடைய கடைசி சகோதரனான பென்யமீனை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்றும், அப்பொழுது சிமியோனை விடுவிப்பதாகவும் கூறினான். யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தகப்பனிடம் இதைக் கூறினபொழுது அவர் மிகவும் வேதனைக்குள்ளானார். ஆனால் வேறு வழியின்றி பஞ்சத்தின் காரணமாக தன்னுடைய இளைய மகனான பென்யமீனையும் அனுப்பி வைத்தார். 

சகோதரர்களை சோதித்த யோசேப்பு:

யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய இளைய சகோதரனான பென்யமீனைக் கூட்டிக் கொண்டுவந்து, யோசேப்புக்கு முன்பாக குனிந்து வணங்கினார்கள். யோசேப்புக்கு தன்னுடைய இளைய சகோரனான பென்யமீனைக் கண்டவுடன் அவனால் தன்னை அடக்கிக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் தன்னுடைய சகோதரர்களை பரிசோதிக்க அவன் விரும்பினான். அதனால் தன்னுடைய வேலைக்காரனை அழைத்து, எல்லருடைய சாக்கு பைகளிலும் தானியங்களை நிரப்பி, தன்னுடைய இளைய சகோதரனான பென்யமீனுடைய சாக்கில் தன்னுடைய வெள்ளிப் பாத்திரத்தையும் வைக்க கூறினான். பின்பு அவர்களை தங்களுடைய ஊருக்குப் போக திரும்பி அனுப்பினான். கொஞ்ச நேரம் கழித்து அவன் தன்னுடைய வேலைக்காரனை அவர்கள் பின்னாக அனுப்பி, தன்னுடைய வெள்ளிப் பாத்திரத்தை அவர்கள் திருடி சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினான். 

யோசேப்பை பணிந்து கொண்ட சகோதரர்கள்:

யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் சாக்குகளை தேடி பார்க்கும்படி கூறினார்கள். அவ்வாறு அவர்கள் தேடி பார்த்தபொழுது, அந்த வெள்ளிப் பாத்திரத்தை பென்யமீனுடைய சாக்கில் கண்டு பிடித்தார்கள். வேலைக்காரர் பென்யமீனை தண்டிக்கும்படி அவன் தங்களோடுகூட வர வேண்டும் என்று கூறினார்கள். யோசேப்பின் மற்ற சகோதரர்களும் கூடவே எகிப்திற்கு சென்றார்கள். அவர்கள் யோசேப்பிற்கு முன்பாக பணிந்து கொண்டார்கள். யோசேப்பினுடைய சகோதரர்கள் தங்கள் இளைய சகோதரனை எகிப்திலே விட்டுவிட்டு தங்கள் தேசத்திற்கு திரும்பி செல்லுவதற்கு ஆயத்தமாயில்லை. யூதா என்கிற ஒரு சகோதரன் தான் பென்யமீனிற்கு பதிலாக தண்டனையை ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினான். அப்பொழுது யோசேப்பிற்கு தன்னுடைய சகோதரர்கள் முன்போல் அல்லாது மாறிவிட்டது புரிந்தது. 

தன்னை அறிமுகப்படுத்தின யோசேப்பு:

யோசேப்பிற்கு தன்னுடைய சகோதரர்களுக்கு முன்பாக தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களிடம் தான் யோசேப்பு என்றும் தான் எகிப்திற்கு அதிபதியாயிருப்பதாகவும் கூறினான். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய தகப்பனை அழைத்து வந்து எகிப்து தேசத்தில் வாழும்படியாகவும் கூறினான். அதன்படியே யோசேப்பினுடைய தகப்பனும் அவனுடைய சகோதரர்களும் எகிப்திற்கு வந்து கோசேன் என்கிற இடத்திலே குடியேறினார்கள். யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடம் தான் அவர்களை மன்னித்து விட்டதாகவும், அவர்கள் யோசேப்புக்குத் தீமை செய்ய நினைத்த பொழுதிலும், அவர்கள் எல்லாருடைய உயிரையும் காப்பாற்றுவதற்காகவே தேவன் அவனை எகிப்திற்கு அனுப்பனதாகவும் கூறி அவர்களோடு சமாதானமாக வாழ்ந்தான். 

வேதபகுதி: ஆதியாகமம் 37, 39-45

மனப்பாட வசனம்: ஆதியாகமம் 50;19,20  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யோசேப்பு சூரியனும், சந்திரனும், பதினொரு ……………………………… தன்னை வணங்கினதாகக் கனவு கண்டான்.

2.    யோசேப்பின் சகோதரர்கள் அவனை மீதியானிய வியாபாரிகளிடம் …………………………. வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள்.

3.        யோசேப்பு தன்னுடைய இளைய சகோதரனான பென்யமீனுடைய சாக்கில் தன்னுடைய ……………………………………….. வைக்க கூறினான்

4.        யோசேப்பினுடைய தகப்பனும் அவனுடைய சகோதரர்களும் எகிப்திற்கு வந்து …………………………….. என்கிற இடத்திலே குடியேறினார்கள். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    யோசேப்பின் கனவை கேட்டு அவனுடைய தகப்பனார் என்ன செய்தார்?

 

2.    யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பு மரித்து விட்டதாக அவர்கள் தகப்பனை எவ்வாறு நம்ப வைத்தார்கள்?

 

3.      யோசேப்பின் சகோதரர்கள் ஏன் எகிப்திற்கு வந்தார்கள்?

 

4.      யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினவுடன் அவர்களிடம் என்ன கூறினான்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை எவ்வாறு சோதித்தான்?

 

சாலொமோன் ராஜா கட்டின தேவாலயம் (King Solomon Builds the Temple of God), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

இளநிலை வகுப்பு (JUNIOR)  வயது :  10 - 11  வயது வகுப்பு :  V  & V I இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்...