இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் – 9
கோராகின் கலகம்
முந்தைய பாடம் ஒன்றில் ஆரோன் பிரதான ஆசாரியனாக அபிஷேகம் செய்யப்பட்டதைப் பார்த்தோம். அதன் பின்னர் கானான் தேசத்தை சுற்றிப் பார்க்க சென்ற சில தலைவர்கள் அந்த தேசத்தைக் குறித்து கெட்ட செய்தியை பரப்பினதையும், இஸ்ரவேல் மக்கள் ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல் கலகம் செய்ததையும், அதனால் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிய வேண்டும் என்ற தண்டனை பெற்றதையும் பார்த்தோம். அதன் பின்னர் பல வருடங்களாக இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். ஆரோன் பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தபின், இஸ்ரவேல் தலைவர்களில் வேறு சிலர் இந்த ஆசாரியப்பட்டம் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால் அவர்கள் மோசேயையும், ஆரோனையும் எதிர்த்தார்கள். அந்த கலகத்திற்கு தலைவனாக செயல்பட்டது கோராகு.
கோராகு லேவி கோத்திரத்தை சேர்ந்தவன், மோசேக்கும், ஆரோனுக்கும் மிக நெருங்கிய உறவினன். ஆரோனுக்கும், அவன் வம்சாவளியை சார்ந்தவர்களுக்கும் ஆசாரியப்பட்டம் கொடுக்கப்பட்டது. அவனுடைய கோத்திரமாகிய லேவி கோத்திரத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு லேவியர் பட்டம் கொடுக்கப்பட்டது. அவர்களுடைய வேலை, ஆசாரியர்களுக்கு உதவி ஊழியம் செய்வதாகும். ஆசரிப்புக்கூடாரத்தை காவல் காப்பது, ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பொருட்களை சுமப்பது ஆகியவை அவர்களுடைய ஊழியம். கோராகோ லேவியனாக ஊழியம் செய்வதை விடவும், ஆசாரிய ஊழியம் செய்வதையே விரும்பினான். அதனால் அவன் ரூபன் கோத்திரத்தை சேர்ந்த தாத்தான், அபிராம், ஓன் ஆகிய வேறு சில தலைவர்களையும், இஸ்ரவேலிலே பிரபலமான 250 தலைவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கலகம் செய்தான். அவர்கள் மோசேயையும் ஆரோனையும் பார்த்து நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு மேலாக உயர்த்துகிறீர்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். மோசே அதைக் கேட்டபொழுது முகங்குப்புற விழுந்தான்.
மோசே கோராகைப் பார்த்து, ஆண்டவர் தம்முடையவர்கள் இன்னார் என்று காட்டுவார் என்று சவால் விட்டான். மோசே கோராகிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும், அவர்களுடைய தூபகலசத்திலே (தூபவர்க்கத்தை எரிக்கிற சட்டி), நெருப்பைப் போட்டு, அதில் தூபவர்க்கத்தைப் போட்டு கர்த்தருடைய சந்நிதிக்கு கொண்டு வரும்படியாகவும், அப்பொழுது கர்த்தர் தாம் யாரைத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்று காண்பிப்பார் என்றும் கூறினான். அதுமட்டுமல்லாமல் தாத்தான், அபிராம் என்பவர்களை தம்மை வந்து சந்திக்கும்படியாகவும் கூறினான். ஆனால் அவர்களோ மோசேயை இழிவாகப் பேசி, மோசே இஸ்ரவேல் ஜனங்களின் மேல் அதிகாரம் செலுத்த முயற்சிப்பதாகவும், அவர்களை பாலும், தேனும் ஓடுகிற தேசத்திற்கு கொண்டு செல்லாமல் வழியிலே கொல்ல முயற்சிப்பதாகவும் வீண்பழி சுமத்தினார்கள். மோசே இந்த வார்த்தைகளை கேட்டபொழுது மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவரிடம் அவர்களுடைய காணிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று கூறினார். கோராகையும், அவனுடைய கூட்டத்தார் 250 பேரையும், மறுநாளிலே அவர்களுடைய தூபகலசத்தை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய சந்நிதிக்கு வரும்படியும் கூறினார்.
ஆண்டவருடைய கோபாக்கினை (நியாயத்தீர்ப்பு):
கோராகும், அவனுடைய கூட்டத்தாரும் தங்கள் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு அதிலே தூபவர்க்கத்தை இட்டு ஆசரிப்புக் கூடார வாசலிலே வந்து நின்றார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக கூட்டம் கூடும்படியாக தூண்டினார்கள். மறுபடியும் ஆண்டவர் மோசேயைப் பார்த்து இஸ்ரவேல் ஜனங்களை தான் அழிக்கப் போவதாகக் கூறினார். ஆனால் மோசேயோ ஆண்டவரிடம் இஸ்ரவேல் ஜனங்களுக்காக மன்றாடினான். ஆண்டவர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களை கோராகு, தோத்தான், அபிராம் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டு தள்ளிபோகும்படியாக கூறும்படியாக சொன்னார்.
கோராகு, தோத்தான், அபிராம் விழுங்கப்படுதல்:
மோசே அதை ஜனங்களிடம் சொன்னபொழுது, இஸ்ரவேல் மக்கள் அவர்களை விட்டு தள்ளிப் போனார்கள். அப்பொழுது மோசே ஜனங்களைப் பார்த்து, எல்லாருக்கும் நடப்பது போல இவர்களுக்கு நடந்தால், அது கர்த்தரால் வந்தது அல்ல என்றும், அவர்களுக்கு ஒரு புதுவிதமான தன்டனை கிடைக்கப் போவதாகவும் கூறினார். உடனே பூமி இரண்டாக பிளந்து கோராகு, தோத்தான், அபிராம் என்பவர்களை விழுங்கிப் போட்டது. மக்கள் அதைப் பார்த்து பயந்து விலகி ஓடினார்கள்.
பலிபீடத்துக்கான வெண்கல மூடி:
அதுமட்டுமல்லாமல், அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து வந்து தூபம் காட்டின 250 பேரையும் எரித்துப் போட்டது. ஆண்டவர் மோசேயைப் பார்த்து, ஆரோனுடைய மகனாகிய எலெயாசாரிடம் தூபம் காட்டி ஆண்டவரால் தண்டிக்கப்பட்ட 250 பேருடைய தூபகலசங்களையும், நெருப்பிலிருந்து எடுக்கும்படியாகக் கூறினார். அவைகள் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரப்பட்டபடியால் பரிசுத்தமாகிவிட்டன. அதனால் அவைகளை எடுத்து பலிபீடத்தை மூடுவதற்கான ஒரு மூடியை அந்த வெண்கலத்தை வைத்து செய்யும்படியாகக் கூறினார். அது எதற்கென்றால் ஆரோனின் வம்சாவளியை சாராத யாரும் பலிபீடத்தில் தூபத்தைக் காட்டுவதற்கு அனுமதி இல்லை என்று இஸ்ரவேல் மக்களுக்கு நினைப்பூட்டுதலாய் இருக்குப்படியாகவே! மோசே கூறினபடியே ஆரோனுடைய மகனாகிய எலெயாசார் அந்த 250 வெண்கல தூபகலசத்தில் இருந்த வெண்கலத்தை தகடுகளாய் அடித்து அதை வைத்து பலிபீடத்திற்கு ஒரு வெண்கல மூடியை செய்தார்.
தேவ கோபமும் ஆரோனுடைய மத்தியஸ்தமும்:
மறுநாள் காலமே இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். தேவ கோபம் கோராகின் மேல் வெளிப்பட்டு, பூமி அவனை விழுங்கினதை மக்கள் பார்த்திருந்த பொழுது அவர்கள் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, நீங்கள் தேவனுடைய ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். அதனால் தேவ கோபம் ஜனங்கள் மேல் வந்தது. மறுபடியும் தேவனுடைய பிரசன்னத்தின் மேகம் ஆசரிப்புக் கூடாரத்தில் காணப்பட்டது. ஆண்டவர் மேசேயிடம் தாம் இஸ்ரவேல் மக்களை அழித்து மோசேயை ஒரு பெரிய நாடாக உருவாக்குவதாக வாக்குக் கொடுத்தார். ஆனால் மோசேயோ அதற்கு சம்மதிக்காமல் இஸ்ரவேல் மக்களை மன்னிக்கும்படி ஆண்டவரிடம் கெஞ்சினான். ஆனால் அதற்குள்ளாக தேவ கோபம் இறங்கினது. இஸ்ரவேல் மக்கள் ஒரு கொடிய கொள்ளைநோயினால் தாக்கப்பட்டு உயிரிழக்க ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட மோசே ஆரோனிடம், தூபகலசத்தில் தூபவர்க்கத்தைப் போட்டு, இஸ்ரவேல் மக்களுக்காக ஆண்டவரிடம் பாவநிவிர்த்தி செய்யும்படியாகக் கூறினார். ஆரோன் மோசே சொன்னது போலவே எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் மக்களின் நடுவே ஓடினான். பின்னர் அவன் போய், உயிரோடிருக்கிறவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் நடுவே நின்று கொண்டான். அதனால் கொள்ளை நோய் நிறுத்தப்பட்டது. ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுத்ததினால் அன்றைய தினம் 14,700 பேர் தண்டிக்கப்பட்டு உயிரிழந்தார்கள்.
ஆரோனுடைய கோல் துளிர்த்தல்:
ஆண்டவர் மோசேயிடம் இஸ்ரவேல் மக்களிடம், ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு கோலாக, பன்னிரண்டு கோல்களை வாங்கி அவைகளை ஆசரிப்புக்கூடாரத்திலே உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கக் கூறினார். லேவி கோத்திரத்தின் சார்பாக ஆரோனுடைய கோலை வைக்கும்படியாகக் கூறினார். கோல் என்றால் பழங்காலங்களிலே பெரும்பாலாக ஆடுமேய்ப்பவர்கள் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுவதற்காக ஒரு மரக்கம்பை வைத்திருப்பார்கள்.. அது தான் கோல் என்று அழைக்கப்பட்டது. வேதாகமம் முழுவதும் இந்த கோலைப் பற்றி பல இடங்களில் வாசிப்போம். மோசே கூறினது போலவே எல்லா கோத்திரத் தலைவர்களும் கோல்களை கொண்டு வந்தார்கள்.
மோசே அதை தேவ சமூகத்திலே வைத்தார். அடுத்த நாள் பார்க்கும்பொழுது, ஆரோனுடைய கோல் துளிர்த்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அது பூப்பூத்து, வாதுமைப்பழங்களையும் கொடுத்திருந்தது. மோசே அதை வெளியே கொண்டு வந்து அதை இஸ்ரவேல் மக்களிடம் காட்டினார். இஸ்ரவேல் மக்கள் ஆரோனைப் பற்றி முறுமுறுக்காதபடி அடையாளமாக அந்த கோலை ஆசரிப்புக்கூடாரத்திலே, உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைத்தார்.வேத பகுதி: எண்ணாகமம் 16, 17
மனப்பாட வசனம்: ரோமர் 13:1, 2
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. கோராகு ………………………………… கோத்திரத்தை சார்ந்தவன்.
2. கோராகு இஸ்ரவேலிலே பிரபலமான …………………… தலைவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கலகம் செய்தான்
3. ஆரோனுடைய மகனாகிய …………………………… 250 வெண்கல தூபகலசங்களை வைத்து பலிபீடத்திற்கு ஒரு வெண்கல மூடியை செய்தார்.
4. ஆரோனுடைய கோல் துளிர்த்து, பூப்பூத்து, …………………………………….. கொடுத்திருந்தது.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. மோசே கோராகையும் அவனுடைய கூட்டத்தாரையும் ஆண்டவருடைய சமூகத்திலே எதைக் கொண்டு வரச் சொன்னார்?
2. எது பலிபீடத்தின் மூடிக்கான தகடுகளாய் அடிக்கப்பட்டது?
3. ஆரோன் மக்களுக்காக எப்படி பாவநிவிர்த்தி செய்தார்?
4. ஆரோனுடைய கோல் தேவ சமூகத்தில் வைக்கப்பட்டவுடன் என்ன நடந்தது ?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. கோராகு மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஏன் கலகம் செய்தான்? அவன் மேல் வந்த நியாயத்தீர்ப்பு என்ன?