மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)
வகுப்பு: III & IV
Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English
https://jacobsladdersundayschool.blogspot.com/
பாடம் – 9
பின்னிட்டுத் திரும்பின யோர்தான் நதி
இஸ்ரவேலருடைய தலைவனாகிய மோசே
மரித்த பின், யோசுவா இஸ்ரவேலருடைய தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, வாக்குத்தத்த தேசமாகிய
கானான் தேசத்திற்கு இஸ்ரவேலரை அழைத்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் கானான் தேசத்திற்கு
மிக அருகில் வந்து விட்டார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பாக மிகவும் சீற்றத்துடன் பாய்ந்து
கொண்டிருந்த “யோர்தான் நதி” என்கிற ஒரு பெரிய ஆறு இருந்தது. யோர்தான் நதி அறுப்புக்
காலம் முழுவதும் கரைபுரண்டு ஓடும். இஸ்ரவேல் ஜனங்கள் அதன் கரையிலே மூன்று நாட்கள் தங்கி
இருந்தார்கள்.
மூன்று நாட்கள் கழித்து, இஸ்ரவேலின்
அதிபதிகள் (தலைவர்கள்) பாளயம் முழுவதும் சுற்றி நடந்து, அவர்கள் சீக்கிரமாய் யோர்தானைக்
கடக்க போவதாக அறிவித்து, அதைக் கடக்கும்பொழுது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னவென்று
கற்பித்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்கள், அதை தோளில் எடுத்துக்
கொண்டு நடக்க ஆரம்பிக்கும்பொழுது இஸ்ரவேல் ஜனங்களும் புறப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள்
கூடாரத்தில் குடியிருந்ததால், அவர்கள் எங்காவது பிரயாணப்படும்பொழுது தங்களுடைய சாமான்களைக்
கட்டி, கூடாரத்தையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு பிரயாணப்படுவார்கள்.
இஸ்ரவேலின் அதிபதிகள் ஜனங்களைப்
பார்த்து அவர்கள் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வரக் கூடாதென்றும், அவர்களுக்கும்
உடன்படிக்கைப் பெட்டிக்கும் இடையில் இரண்டாயிரம் முழம் (அரை மைலுக்கு சற்று அதிகமான
தூரம்) இடைவெளி இருக்க வேண்டுமென்றும் கூறினார்கள். இஸ்ரவேலின் தலைவனாகிய யோசுவா ஜனங்களைப்
பார்த்து, மறுநாள் கர்த்தர் அற்புதம் செய்யப் போகிறபடியால் ஜனங்கள் தங்களைப் பரிசுத்தம்
பண்ணிக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுவதற்காக
குளிப்பது, சில உணவுகளை தவிர்ப்பது, பலி செலுத்துவது, உபவாசிப்பது போன்ற பல முறைகளைக்
கையாண்டு வந்தார்கள்.
அடுத்த நாள் காலையில் ஆசாரியர்கள் உடன்படிக்கைப்
பெட்டியை எடுத்துக் கொண்டு யோர்தான் நதியை நோக்கி நடந்தார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி
ஆசாரியர்கள் யோர்தான் நதிக்குள் சில அடிகள் மாத்திரம் எடுத்து வைத்து பின்பு நிற்க
வேண்டும். ஆசாரியர்களுடைய கால்கள் யோர்தான் நதியில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர்கள்
ஓடாமல் குவியலாக நிற்கும் என்றார்.
ஆசாரியர்கள் தங்களுக்கு கட்டளையிட்டபடியே
செய்தார்கள், அப்பொழுது யோர்தானின் தண்ணீர் பின்னிட்டுத் திரும்பினது. மேலேயிருந்து
ஓடி வருகிற தண்ணீர் நின்று ஆதாம் என்கிற ஊர் வரைக்கும் குவியலாக நின்றது. உப்புக்கடல்
என்று சொல்லப்பட்ட சவக்கடலுக்கு போகிற தண்ணீர் பிரிந்து ஓடினது. அதனால் யோர்தான் நதியின்
நடுவில் உலர்ந்த தரை காணப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அதன் வழியாக யோர்தான் நதியைக் கடந்தார்கள்.
அவர்கள் எரிகோ என்கிற பட்டணத்தின் அருகே யோர்தான் நதியைக் கடந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள்
நதியைக் கடக்குமட்டும் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நதியின்
நடுவே நின்றார்கள்.
மனப்பாட
வசனம்: யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று. கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. (சங்கீதம்
114:2,3)
பாடப்
பயிற்சிகள்
கேள்வி
பதில்
1. இஸ்ரவேலருக்கு முன் இருந்த நதியின் பெயர் என்ன? ………………………………………
2. ஆசாரியர்கள்
எதை சுமந்து சென்றார்கள்?
………………………………………
3. இஸ்ரவேலருக்கும் உடன்படிக்கைப் பெட்டிக்கும் எத்தனை
முழத் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்? ………………………………………..
4. யோர்தான்
நதி திரும்பி எந்த கடலில் விழுந்தது? …………………………………
5. இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானைக் கடக்கும் பொழுது யார் நதியின் நடுவே நின்றார்கள்? ………………………………………
சரியா / தவறா?
1. மோசேக்குப் பின் ஆரோன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டார் ( )
2.
இஸ்ரவேலர் நைல் நதியின் கரையில் தங்கினார்கள் ( )
3. யோசுவா
இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளும்படியாக கூறினான் ( )
4. ஆசாரியர்களுடைய கால்கள் யோர்தான் நதியில் பட்டவுடனே நதி இரண்டாகப் பிரிந்து ஓடினது ( )
5. ஆசாரியர்கள் யோர்தான் நதியின் நடுவே உள்ள ஒரு பாறையின் மேல் நின்றார்கள் ( )
No comments:
Post a Comment