பாடம்
– 8
ஆரோன் செய்த பொன்
கன்றுகுட்டி
இஸ்ரவேலர் கொடுமையாய் ஒடுக்கப்படுவதை தேவன் பார்த்து, அவர்களை அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கி அவர்களுடைய சொந்த தேசத்திற்கு கூட்டி செல்லுவதற்காக மோசே என்கிற ஒரு தலைவனை எழுப்பினார். மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை கானானுக்கு அழைத்து செல்லும் வழியில் அவர்கள் சீனாய் வனாந்திரம் என்கிற ஒரு பெரிய வனாந்திரத்தை கடக்க வேண்டியிருந்தது. இந்த பாடத்தில் பார்க்கிற சம்பவம் இந்த சீனாய் வனாந்திரத்தில் தான் நடந்தது!
நாம் முதல் பாடத்தில் ஆதாம் எவ்வாறு பாவத்தில் விழுந்தான் என்றும் தேவன் பாம்பிடம், ஸ்திரீயின் வித்தாக தோன்றும் ஒருவர் அதன் தலையை நசுக்குவார் என்று சவால் விட்டிருந்ததையும் பார்த்தோம். அது “இரட்சிப்பின் திட்டம்” என்று அழைக்கப்படுகின்றது. அந்த இரட்சகரை பிறக்கப் பண்ணி, இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு பரிசுத்தமான ஜனக்கூட்டத்தை தேவன் ஆயத்தம் பண்ணவேண்டியிருந்தது. அதற்காக இஸ்ரவேல் ஜனங்களை அவர் தெரிந்தெடுத்து பரிசுத்தமாய் வாழ்வதற்காக நியாயப்பிரமாணங்களையும், விசேஷமான கட்டளைகளையும் கொடுத்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு, இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவர்கள் சீனாய் வனாந்திரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு இருந்த சீனாய் மலையடிவாரத்தில் தங்கள் கூடாரங்களை இட்டு பாளையங்களை அமைத்தார்கள். அப்பொழுது ஆண்டவர் சீனாய் மலையிலிருந்து மோசேயை மலையின்மேல் ஏறி வரும்படியாகக் கூப்பிட்டார். மோசே மலை மேலே ஏறி போனார். ஆண்டவர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்கள் தமக்கு எப்பொழுதும் பயந்திருக்கும்படி அவர்களோடும் தாம் நேரடியாக பேச விரும்புவதாகக் கூறினார். அதன்படி இரண்டு நாட்கள் இஸ்ரவேல் ஜனங்கள் ஆயத்தப்பட்டபின் மூன்றாம் நாளில் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும், மின்னல்களும், மலையின் மேல் கார்மேகமும், எக்காளசத்தமும் உண்டாயிற்று (யாத்திராகமம் 19: 9-25). ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களோடே பேசி அவர்களுக்கு பத்து பிரதான கற்பனைகளை கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் அவர்கள் பரிசுத்தமாகவும், பிரித்தெடுக்கப்பட்ட ஜனங்களாகவும் வாழுவதற்காக வேறுபல நியமங்களையும் அவர்களுக்கு கொடுத்தார். இதைப்பற்றி யாத்திராகம புஸ்தகத்தில் 20ஆம் அதிகாரத்திலிருந்து 23ஆம் அதிகாரம் வரை வாசிக்கலாம்.
இதன்பின்னர் ஒருமுறைகூட ஆண்டவர் மோசேயை சீனாய் மலையின் மேல் ஏறி வரும்படி கூறினார். மோசே மலையின் மேல் ஏறிப் போய், நாற்பது நாட்கள் அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் மலையின் மேல் இருந்தார். அப்பொழுது ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கற்பிக்கும்படி வேறு பல கட்டளைகளையும் மோசேக்குக் கொடுத்தார். ஆண்டவர் தாம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கற்பித்த பத்து கற்பனைகளையும் இரண்டு சாட்சிப் பலகைகளில் எழுதி அதை மோசேயிடம் கொடுத்தார். அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டது. அந்த பலகையில் இருந்த எழுத்துக்களை தேவனே எழுதியிருந்தார் (யாத்திராகமம் 24:15 – 32:7).
மோசே மலையின் மேல் ஏறிப்போகும்பொழுது இஸ்ரவேல் ஜனங்களை, தன்னுடைய சகோதரனாகிய ஆரோன், மற்றும் ஊர் என்பவர்களின் பொறுப்பிலே விட்டுவிட்டு போயிருந்தார். மோசே மலையிலிருந்து இறங்கி வருவதற்கு தாமதித்ததை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டபொழுது அவர்கள் ஆரோனைப் பார்த்து, “மலையின் மேல் ஏறிப் போன மோசேக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, அதனால் இப்பொழுது எங்களுக்கு முன்பாக சென்று எங்களை வழிநடத்தக்கூடிய தெய்வங்களை எங்களுக்கு உண்டு பண்ணும்” என்றார்கள். தாங்கள் சொல்லுகிறபடி செய்யாவிட்டால் அவனை கல்லெறியப் போவதாகவும் சொன்னார்கள்.
அப்பொழுது ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம், அவர்கள் காதுகளில் அணிந்திருந்த பொன் அணிகலன்களை கழற்றி அவனிடத்தில் கொடுக்கும்படியாகக் கூறினான். அப்படியே அவர்கள் கொடுத்தார்கள். அப்பொழுது அவன் ஒரு பொன் கன்று குட்டியை செய்தான்.
இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் சந்தோஷப்பட்டு, “உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்த தெய்வங்கள் இவைகளே” என்றார்கள். ஆரோன் அதற்கு ஒரு பலிபீடம் கட்டினான். ஜனங்கள் ஆடி பாடி அதற்கு பலி செலுத்தினார்கள்.
மலையின் மேல் இருந்த மோசேயிடம் ஆண்டவர், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வழிகளைக் கெடுத்துக்கொண்டார்கள், அதனால் சீக்கிரம் கீழே போகும்படியாகக் கூறினார். மோசே கீழே இறங்கி வந்தபோது ஆரோன் செய்திருந்த பொன்கன்றுகுட்டியைப் பார்த்து மிகவும் கோபம் கொண்டார். தன் கையில் வைத்திருந்த கற்பலகைகளை மலையடிவாரத்தில் எறிந்து உடைத்துப் போட்டார். பின்னர் அந்த பொன்கன்றுகுட்டியை நெருப்பிலே சுட்டெரித்து, அதை பொடியாக அரைத்து தண்ணீரின் மேல் தூவி இஸ்ரவேல் ஜனங்களை குடிக்கும்படி செய்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் பொன்கன்று குட்டியை செய்ததற்காக இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் அழிக்க வேண்டும் என்று இருந்தார். ஆனால் மோசே கெஞ்சி பிரார்த்தித்ததினிமித்தமாக அவர்கள் தப்புவிக்கப்பட்டார்கள்.
வேத பகுதி: யாத்திராகமம் 32
மனப்பாடவசனம்: உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்க வேண்டாம்
………………………நான் அதை நிரப்புவேன். (சங்கீதம் 81:9,10)
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1.
மோசே மலையின் மேல் ………………………..
நாட்கள் அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தார்.
2.
மோசே மலையின் மேல்
ஏறிப்போகும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்களை ……………………… மற்றும் …………………. என்பவர்களின்
பொறுப்பிலே விட்டுவிட்டு போயிருந்தார்
3.
ஆரோன் ………………………………. ஒரு கன்று
குட்டியை செய்தான்.
4.
மோசே கையில் வைத்திருந்த
……………………………… மலையடிவாரத்தில் எறிந்து உடைத்துப் போட்டார்.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. தேவன் ஏன்
இஸ்ரவேல் ஜனங்களோடு நேரடியாகப் பேச விரும்பினார்?
2. மூன்றாம் நாள் விடியற்காலையிலே மலையின் மேல் நடந்தது
என்ன?
3. சாட்சிப்
பலகைகளில் என்ன எழுதப்பட்டிருந்தது?
4. பொன்கன்று
குட்டியைப் பார்த்து கோபப்பட்ட மோசே அந்த பொன் கன்று குட்டியை என்ன செய்தார்?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. மோசே
மலையிலிருந்த இறங்க தாமதித்த பொழுது சம்பவித்தது என்ன?
No comments:
Post a Comment