பாடம் – 9
தேவனுடைய மகிமையைக் கண்ட மோசே
இதற்கு முந்தின பாடத்திலே ஆரோன் பொன் கன்றுகுட்டியை செய்ததைப் பார்த்தோம். மறுநாள் மோசே, இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தை மன்னிப்பதற்காக கேட்கும்படி திரும்பவும் மலையின் மேல் ஏறிப் போனார். மோசே ஆண்டவரிடம் ஜனங்களின் பாவத்தை மன்னியும் இல்லாவிட்டால், உம்முடைய புஸ்தகத்திலிருந்து என்னுடைய பெயரை கிறுக்கிப் போடும் என்று கூறினார். ஆண்டவர் மோசேயிடம் யார் தனக்கு எதிராக பாவஞ்செய்கிறார்களோ அவர்களுடைய பெயரே கிறுக்கப்படும் என்று கூறினார். இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பதிரும்ப பாவஞ்செய்வதால் தாம் இனி அவர்கள் முன் செல்லப் போவதில்லை என்றும், தம்முடைய தூதனே அவர்கள் முன் செல்லப்போவதாகவும் கூறினார் (யாத்திராகமம் 32:30 – 33:3).
ஆண்டவர் தங்களுக்குமுன் இனி செல்லப் போவதில்லை என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் கேட்டவுடன் தங்கள் ஆபரணங்களை (நகைகளை) போட்டுக் கொள்ளாமல் துக்கித்தார்கள். மோசே இஸ்ரவேல் ஜனங்கள் தங்கியிருந்த பாளயத்தில் இருந்த தன் கூடாரத்தைப் பெயர்த்து எடுத்து, பாளய எல்லைக்கு வெளியே தூரத்தில் அதை வைத்து அதற்கு “ஆசரிப்புக்கூடாரம்” என்று பெயரிட்டார். (பாளயம் என்றால் இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரங்களை அமைத்து தங்கியிருந்த இடம்). கர்த்தரைத் தொழுது கொள்ளுவதற்கு ஜனங்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு போவார்கள்.
ஒருநாள் மோசே ஆண்டவரிடம், இந்த ஜனங்களை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னீர், ஆனால் என்னோடே கூட யாரை அனுப்புவேன் என்று சொல்லவில்லையே என்று கேட்டார். மோசே மறுபடியும் ஆண்டவரிடம், தனக்கு ஆண்டவருடைய கண்களில் கிருபை கிடைத்திருக்கிறதென்று சொன்னதையும் நினைப்பூட்டி தேவனுடைய திட்டங்களை தனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம், தன்னுடைய சமுகம் (சமுகம் என்றால் தேவன் தங்களுடன் வருகிறார் என்று ஜனங்களால் உணரக்கூடிய விதத்தில் அவருடைய பிரசன்னம்) மோசேக்கு முன்பாக செல்லுமென்றும், அதனால் மோசேக்கு மனஅமைதல் உண்டாகும் என்றும் வாக்குக் கொடுத்தார். மோசே ஆண்டவரிடம் தேவனுடைய பிரசன்னம் தங்களுக்கு முன் செல்லாவிட்டால், தங்களை அந்த இடத்திலிருந்து கொண்டு போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மோசே ஆண்டவரிடம், அவருடைய மகிமையை (மகிமை என்றால் ஆண்டவருடைய விவரிக்க இயலாத ஒப்பற்ற சிறப்புகள்) தனக்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆண்டவர் மோசேயிடம் தன்னுடைய இரக்கத்தை மோசேக்கு முன்பாக கடந்துபோகப் பண்ணுவதாகவும், அதன்பின்னர் தன்னுடைய நாமத்தை (பெயரை) மோசேக்கு முன்பாகக் கூறுவதாகவும் வாக்குக் கொடுத்தார். (தேவனுடைய நாமம்: நம்முடைய தேவனுக்கு அவருடைய தனிச்சிறப்புகளை விளக்கும் பல பெயர்கள் உண்டு, பழைய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்பொழுது பல்வேறு காலகட்டங்களில் மற்றும் வித்தியாசமான சூழ்நிலைகளில் தாம் நிறைவேற்றப்போகிற கிரியைகளின் வெளிப்பாடாகவும், அடையாளமாகவும் தேவன் தம்முடைய நாமங்களை அல்லது பெயர்களை வெளிப்படுத்தியிருப்பதை நாம் பார்க்கலாம்).
பின்பு தேவன் மோசேயிடம், தன்னுடைய முகத்தை ஒருவராலும் பார்க்க முடியாது என்றும் தன்னுடைய முகத்தைப் பார்த்தபின் யாரும் உயிரோடு இருக்க இயலாது என்றும் கூறினார். ஆண்டவர் மோசேயிடம், விடியற்காலமே ஆயத்தமாகி, சீனாய் மலையின் மேல் ஏறி வந்து தான் காண்பிக்கிற இடத்தில் நிற்க வேண்டும் என்று கூறினார்.ஆப்பொழுது மோசெக்கு முன்பாக தேவனுடைய மகிமையை கடந்து போகச் செய்வதாகவும், தேவனுடைய மகிமை கடந்து போகும்பொழுது, மோசேயை கன்மலையில் உள்ள ஒரு வெடிப்பிலே வைத்து, தன்னுடைய கையினால் மூடுவதாகவும், பின்பு அவர் தன்னுடைய கையை எடுக்கும்பொழுது மோசேயால் தேவனுடைய பின்புறத்தை பார்க்கமுடியும் என்றும், தன்னுடைய முகத்தையோ பார்க்க முடியாது என்றும் தேவன் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், மோசே சீனாய் மலையில் ஏறி வரும்பொழுது மலை அடிவாரத்தில் உடைத்துப் போட்ட கற்பலகைகளை போலவே இரண்டு கற்பலகைகளை செய்து, எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். மோசே கர்த்தர் தன்னிடம் சொன்னபடியெல்லாம் செய்தார். அப்பொழுது கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, மோசேயின் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். தேவன் இங்கு தான் முதல்முறையாக தமிழில் தடித்த எழுத்துக்களில் கர்த்தர் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும், எபிரெய வேதாகமத்தில் "YHVH" என்றும் பொதுவாக "யாவே" அல்லது "யெகோவா" என்றும் அழைக்கப்படும் நாமத்தில் வெளிப்பட்டார் (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் குறிப்பை பார்க்கவும்)*. மோசே தரைமட்டும் குனிந்து தேவனை பணிந்து கொண்டார். மோசே தேவனுடைய மகிமையைக் கண்டார்!
மோசே இரவும் பகலும் நாற்பது நாட்கள் உணவு சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் அந்த மலையின் மேல் இருந்தார். மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்த பொழுது அவருடைய முகம் ஒளிர்ந்து பிரகாசித்தது. மோசேயினுடைய முகம் பிரகாசிப்பதைப் பார்த்த இஸ்ரவேல் ஜனங்கள் பயந்தார்கள். அதனால் மோசே இஸ்ரவேல் ஜனங்களோடே பேசும்பொழுது ஒரு துணியை எடுத்து தன் முகத்தை மூடி முக்காடு போட்டுக் கொள்ளுவார். மோசே ஆண்டவருடைய சந்நிதியில் போகும்பொழுது முக்காடை எடுத்து விடுவார், இஸ்ரவேல் ஜனங்களோடே பேசும்பொழுது திரும்ப முக்காட்டை போட்டுக் கொள்ளுவார்.
ஆசிரியர் குறிப்பு: YHVH என்ற நாமத்தை பற்றி மேலும் அறிய விரும்பினால் மேல்நிலை வகுப்பில் (Senior Class) தேவனுடைய நாமங்கள் என்ற தலைப்பில் உள்ள பாடம் - 4ஐ வாசிக்கவும்.
வேதபகுதி: யாத்திராகமம் 33, 34
மனப்பாட வசனம்: எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த, …………………….. ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? (II கொரிந்தியர் 3:7,8)
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. மோசே கூடாரத்தை பாளயத்திற்கு வெளியே தூரத்தில் போட்டு அதற்கு “……………………………………..” என்று பெயரிட்டார்.
2. மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்தவுடன் ……………………………. இறங்கி ஆசரிப்புக்கூடார வாசலில் நிற்கும்.
3. மோசே சீனாய் மலையில் ஏறி வரும்பொழுது இரண்டு …………………….. செய்து எடுத்துக் கொண்டு வர தேவன் சொன்னார்.
4. மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கி வந்த பொழுது அவனுடைய முகம் ………………………………
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஆபரணங்களை கழற்றி ஏன் துக்கித்தார்கள்?
2. தேவன் எவ்வாறு மோசேயோடே ஆசரிப்புக் கூடாரத்தில் பேசினார்?
3. மோசே ஏன் தன்னுடைய முகத்தை பார்க்கமுடியாது என்று தேவன் கூறினார்?
4. மோசே ஜனங்களோடே பேசும்பொழுது ஏன் முக்காடு போட்டுக் கொண்டார்?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. மோசே தேவனுடைய மகிமையை கண்ட விதத்தை எழுதவும்.
No comments:
Post a Comment