இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் – 8
நாற்பது வருட
வனாந்திர தண்டனை
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து கானானுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பயணத்தை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அப்பொழுது அவர்கள் பாரான் வனாந்திரத்திலே காதேஸ் என்கிற இடத்திலே தங்கியிருந்தார்கள். அவர்கள் வாக்குத்தத்த தேசமாகிய கானானுக்கு மிக அருகில் வந்து விட்டார்கள். கானான் தேசத்தில் வேறு பல இன ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம், கானான் தேசத்தை சுற்றிப் பார்ப்பதற்காக மனிதர்களை அனுப்பும்படி கூறினார். இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு கோத்திரங்களின் சார்பில் ஒவ்வொரு தலைவரை அனுப்பும்படியாக கூறினார். யாக்கோபுடைய பத்து மகன்களும், யோசேப்பின் இரண்டு மகன்களும் ஒவ்வொரு கோத்திரமாக கருதப்பட்டார்கள். கோத்திரமாகக் கருதப்பட்ட யாக்கோபுடைய பத்து மகன்கள் யாரென்றால்: ரூபன், சிமியோன், யூதா, இசக்கார், பென்யமீன், செபுலோன், தாண், ஆசேர், நப்தலி, காத். யோசேப்பின் இரண்டு மகன்கள் யாரென்றால்: எப்பிராயீம், மனாசே ஆகியவர்களே.
மோசே அனுப்பின பன்னிரண்டு தலைவர்கள்:
மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்து
ஒவ்வொரு தலைவரை தெரிந்தெடுத்து அவர்களை கானானை சுற்றிப் பார்க்கும்படியாக
அனுப்பினார். யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் மகனான காலேபும், எப்பிராயீம்
கோத்திரத்துக்கு நூனின் மகனான ஓசேயாவும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்கள்.
ஓசேயாவைத் தான் மோசே பின்னர் “யோசுவா” என்று அழைத்தார். மோசே பன்னிரண்டு
தலைவரையும் அழைத்து, அங்கே உள்ள மலையில் ஏறி, தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே
குடியிருக்கிற மக்கள் வலிமை வாய்ந்தவர்களா என்றும், அவர்கள் நல்ல பாதுகாப்பான
கோட்டையில் குடியிருக்கிறார்களா அல்லது கூடாரத்தில் குடியிருக்கிறார்களா என்றும்,
நிலம் வளமானதா என்றும் பார்த்து செய்தி கொண்டு வரும்படியாகக் கூறினார். மேலும்
அங்கு உள்ள பழங்களில் சிலவற்றைக் கொண்டு வரும்படியாகவும் கூறினார்.
தேசத்தை சுற்றிப் பார்த்த பன்னிரண்டு தலைவர்கள்:
அந்த பன்னிரண்டு மனிதர்களும், சீன்
வனாந்திரத்திலிருந்து கானான் தேசத்தை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர்
எபிரோன் என்கிற பட்டணத்துக்கு வந்தார்கள். அங்கே ஏனாக் என்பவனுடைய மகன்களாகிய
அகீமான், சேசாய், தல்மாய் என்பவர்களைப் பார்த்தார்கள். இவர்கள் இராட்சத வம்சத்தை
சார்ந்தவர்கள். பின்னர் அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிற்கு சென்றார்கள். அங்கே
அவர்கள் மிகவும் பெரிய ஒரு திராட்சக்குலையை அறுத்தார்கள். அவர்கள் அந்த
திராசக்குலையை ஒரு கம்பிலே கட்டி இரண்டு பேராக அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
அவர்கள் மாதளம் பழங்களிலும், அத்திப் பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அந்த திராட்சக்குலையை அறுத்ததினிமித்தம் அந்தப்
பள்ளத்தாக்கிற்கு “எஸ்கோல் பள்ளத்தாக்கு” என்கிற பெயர் வந்தது.
துர்செய்தியைக் கொண்டுவந்த பத்து தலைவர்கள்:
அந்த பன்னிரண்டு தலைவர்களும் கானான்
தேசத்தை நாற்பது நாட்கள் சுற்றிப்பார்த்து, பின்னர் மோசேயிடம் திரும்பி
வந்தார்கள். அவர்கள் அந்தத் தேசத்தில் தாங்கள் பார்த்ததை எல்லாம் கூறி, அந்தத்
தேசத்து பழங்களையும் காண்பித்தார்கள். அவர்கள் அந்த தேசம் பாலும் தேனும் ஓடுகின்ற
நல்ல தேசம் தான், ஆனால் அதை நம்மால் கைப்பற்ற முடியாது என்றார்கள். அங்கு உள்ள
பட்டணங்கள் பெரிய பட்டணங்கள், நல்ல பாதுகாப்பாய் கோட்டைகள், அரண்களோடு
கட்டப்பட்டவைகள், அதுமட்டுமல்லாமல் அங்கு வாழ்கின்ற மக்கள் மிகவும் பலசாலிகள்
என்றும் கூறினார்கள். கானான் தேசத்திற்குப் போய்
வந்தவர்களில் யோசுவாவும், காலேபும் மாத்திரமே நல்ல செய்தியைக் கொண்டு வந்தார்கள்.
மனம் தளர்ந்து போன இஸ்ரவேல் மக்கள்:
அந்த பத்து தலைவர்களும் சொன்ன கெட்ட
செய்தியைக் கேட்ட இஸ்ரவேல் மக்கள் மனம் பதறினார்கள். தங்களுக்கென்று ஒரு சொந்த
தேசம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் அவர்கள் இரவு முழுவதும் அழுது
கொண்டிருந்தார்கள். தங்களுக்கு எகிப்து தேசத்திலோ அல்லது, வனாந்திரத்திலோ சாவு
நேரிட்டிருந்தால் மேலாக இருந்திருக்கும் என்று நினைத்தார்கள். தாங்கள் விட்டுவந்த
எகிப்து தேசத்திற்கே திரும்பிசெல்லுவது கூட நல்லதாய்த் தான் இருக்கும் என்று
கருதினார்கள். அதனால் தங்களுக்கென்று ஒரு தலைவனைத் தெரிந்தெடுத்து எகிப்து
தேசத்திற்கு திரும்பிசெல்லுவதற்கு திட்டமிட்டார்கள். இதை அறிந்த மோசேயும், ஆரோனும்
முகங்குப்புற விழுந்தார்கள்.
இஸ்ரவேலரைத் தைரியப்படுத்தின யோசுவாவும், காலேபும்:
மற்ற பத்து தலைவர்களோடே கானானை
சுற்றுப் பார்த்த யோசுவாவும், காலேபும் மக்களை அமர்த்தி அவர்களிடம் அந்த கானான்
தேசத்தை எளிதாய் கைப்பற்றிவிடலாம் என்று திட்டமாய் கூறினார்கள். அந்த தேசம்
பாலும், தேனும் ஓடுகின்ற தேசம், ஆண்டவர் அவர்கள் மேல் அன்பாய் இருந்தால் அந்த
தேசத்தை கண்டிப்பாக அவர்களுக்கு கொடுப்பார் என்றும் ஊக்கப்படுத்தினார்கள்.
ஆண்டவருக்கு விரோதமாக கலகம் பண்ண வேண்டாம் என்று கூறினார்கள். கானான் தேசத்து
மக்களைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை என்றும், அவர்களுக்கு பாதுகாப்பாய்
எதுவும் இல்லை என்றும், தங்களுக்கோ ஆண்டவர் எப்பொழுதும் பாதுகாப்பாய்
இருப்பதாகவும் கூறி இஸ்ரவேல் மக்களை தைரியப்படுத்த முயன்றார்கள். ஆனால் இஸ்ரவேல்
மக்கள் காலேபும், யோசுவாவும் சொன்னவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் இருவரையும்
கல்லெறிய வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
ஆண்டவருடைய தண்டனை – 40 வருட வனாந்திர பயணம்:
அந்த வேளையில் ஆண்டவருடைய மகிமையான
பிரசன்னம் ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்பட்டது. ஆண்டவர் மோசேயிடம் இஸ்ரவேல்
மக்கள் திரும்பவும் திரும்பவும் ஆண்டவரை விசுவாசியாமல் கலகம் செய்வதால், அவர்களை
அழிக்கப் போவதாகவும், மோசேயை ஒரு பெரிய ஜாதியாக உருவாக்குவதாகவும் வாக்குக்
கொடுத்தார். ஆனால் மோசேயோ அதற்கு சம்மதிக்காமல் இஸ்ரவேல் மக்களை மன்னிக்கும்படியாக
வேண்டினார். அதனால் இஸ்ரவேல் மக்களை ஆண்டவர் மன்னித்தார். ஆனால் ஆண்டவர் மோசேயிடம்
தனக்கு விரோதமாய் கலகம் செய்த ஒருவரும் கானான் தேசத்திற்குள் போகப்போவதில்லை
என்றும், அவர்கள் வனாந்திரத்திலே அழிந்து போவார்கள் என்றும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் இஸ்ரவேலின் தலைவர் கானான் தேசத்தை சுற்றிப் பார்த்த நாட்களின் அளவுக்குத்தக்கதாக நாற்பது வருடங்கள், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வருடம் என்கிற அளவின்படி நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் அலைந்து திரிவார்கள் என்றும் கூறினார். கானான் தேசத்தைக் குறித்த கெட்ட செய்தியை பரவச் செய்த பத்து தலைவர்களும் ஒரு வாதையினால் (வாதை என்றால் ஒரு பயங்கரமான நோய்) தண்டிக்கப்பட்டு மரித்தார்கள். இஸ்ரவேல் மக்கள் எப்படியாவது கானான் தேசத்தை சென்றடைய வேண்டும் என்று மலையின் மேல் ஏற முயற்சித்தார்கள். ஆனால் மலையின் மேல் இருந்து அமலேக்கியரும், கானானியரும் இறங்கி வந்து இஸ்ரவேல் மக்களை துரத்தி, அவர்களைத் தோற்கடித்தார்கள். அதன்பின்னர் இஸ்ரவேல் மக்கள் தங்கள் கூடாரங்களுக்கு திரும்பி வந்து தங்கள் நாற்பது வருட வனாந்திர வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.
வேத பகுதி: எண்ணாகமம் 13 & 14
மனப்பாட வசனம்: எண்ணாகமம் 14:24
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. எப்பிராயீம் கோத்திரத்துக்கு நூனின்
மகனான ……………………….. தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.
2. அவர்கள் திராட்சக்குலையை
அறுத்ததினிமித்தம் அந்தப் பள்ளத்தாக்கிற்கு “………………………… பள்ளத்தாக்கு” என்கிற
பெயர் வந்தது.
3. கானான் தேசத்திற்குப் போய்
வந்தவர்களில் ………………….., ………………………… மாத்திரமே நல்ல செய்தியைக் கொண்டு வந்தார்கள்.
4.
கானான்
தேசத்தை சுற்றிப் பார்த்த நாட்களின் அளவுக்குத்தக்கதாக ………………………… வருடங்கள்
வனாந்திரத்தில் அலைந்து திரிவார்கள் என்று கூறினார்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
மோசே அந்த பன்னிரண்டு தலைவர்களையும் கானான் தேசத்தை
சுற்றிப் பார்த்து என்ன செய்தி கொண்டு வரச் சொன்னார்?
2.
அந்த பன்னிரண்டு தலைவர்களும் கானான் தேசத்திலிருந்து
கொண்டு வந்தது என்ன?
3.
கானான் தேசத்திலே வாழ்ந்த இராட்சத வம்சாவளியினர் யார்?
4.
ஆண்டவர் இஸ்ரவேல் மக்களை வனாந்திரத்தில் ஏன் நாற்பது
வருடங்கள் அலைந்து திரிய அனுமதித்தார்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
இஸ்ரவேல் மக்கள் ஏன் மனம் தளர்ந்து போனார்கள்?
யோசுவாவும் காலேபும் அவர்களை எவ்வாறு தைரியப்படுத்தினார்கள்?
No comments:
Post a Comment